எடப்பாடிக்கு இனிமே தான் பிரச்னையே…! காத்திருக்கும் சவால்கள்…!
சென்னை: கட்சியின் இடைக்கால பொது செயலாளர் ஆகி விட்ட எடப்பாடி பழனிசாமிக்கு இனிமே சவால்கள் வெயிட்டிங்கில் உள்ளன.
எப்படியோ நினைத்ததை சாதித்தாகி விட்டது. கலகம் எழுப்பிய ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கம், நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்பது ரத்து, இடைக்கால பொது செயலாளர் என ஒரே நாளில் 3 விக்கெட்டுகளை காலி செய்து தமது அரசியல் ஆட்டத்தின் அடுத்த இன்னிங்சை ஆரம்பித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
கிட்டத்தட்ட அதிமுகவை தமது கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்று கூறுசின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் இனி தான் அவருக்கே சிக்கல்களே காத்திருக்கின்றன. மல்லுக்கு நிற்கும் ஓபிஎஸ் அவ்வளவு எளிதில் எதையும் விட்டு விட மாட்டார். எப்படியாவது ஏதோ ஒரு வகையில், ரூபத்தில் பிரச்னையை ஏற்படுத்தி கொண்டே இருப்பார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் முறையீடு செய்திருப்பதில் இருந்தே அதை பார்க்கலாம். சட்ட போராட்டங்கள், தேர்தல் ஆணையத்தில் முறையீடு என ஒபிஎஸ் இன்னும் வேகம் எடுக்கக்கூடும்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் சென்ற பின்னர், அங்கு நடந்த கலாட்டாக்கள், மோதல்கள், அடிதடிகள்… கடைசியில் கட்சியின் அலுவலகம் சீல் வைத்தது வரை சென்றுவிட்டது.
இடைக்கால பொது செயலாளர் என்பதால் எடப்பாடி பழனிசாமி இனி தமது ஆதரவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முனைவார். மாநிலம் முழுவதும் தமது ஆதரவாளர்களை தக்க வைக்க களம் இறங்குவார். அதே நேரத்தில் தமக்கு நெருக்கமானவர்களின் மீது வருமானவரி ரெய்டு போன்ற நிகழ்வுகளும், நடந்தேறி இருப்பதால் அவர் நினைப்பது அவ்வளவு எளிதில் நடக்காது என்றே தோன்றுகிறது.
கட்சியை தம் பக்கம் இழுத்தாகிவிட்டது என்றாலும், அடுத்து வரும் நாட்கள் தான் இனி எடப்பாடிக்கு சவாலே என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சோதனைகளை எதிர்கொள்ளவே நேரம் போதாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்….! இனி எல்லாம் ஓபிஎஸ்சின் நடவடிக்கையை பொறுத்தே எடப்பாடியின் கேம் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்…!