தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்…? குழப்பிய அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகளை திறக்க இது நேரம் அல்ல என்று பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் திறக்கப்படவில்லை. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், மீண்டும் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது என்பது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், ஆன்லைன் வகுப்புகள், கல்விக் கொள்கை, பொதுத்தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
பள்ளிகள் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். பள்ளிகளை திறக்க இதுநேரம் அல்ல. தற்போது பள்ளி வளாகங்களை தயார் படுத்தும் பணியில், பள்ளிக்கல்வி முழுமையாக ஈடுபட்டுள்ளது என்று கூறினார்.