இன்று புதுச்சேரி ஆட்சிக் கவிழ்ப்பு… நாளை தமிழகம்…! அதிமுக எம்எல்ஏக்களை எச்சரிக்கும் திருமா…!
சேலம்: புதுச்சேரியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு வேலைகள், நாளை தமிழகத்திலும் நடக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.
சேலத்தில் தமிழ் தேச மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: மக்களிடம் கொள்கைகளை பரப்பி ஜெயிக்க முடியாமல், வென்ற கட்சி எம்எல்ஏக்களை விலை பேசி ராஜினாமா செய்ய வைத்து, ஆட்சியை கவிழ்ப்பது எத்தனை அநாகரிகமான செயல்.
இன்று புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியை மோடியின் கும்பல் கவிழ்த்தவிட்டது. 2 மாதத்தில் தேர்தல் வரும் நிலையில் ஆட்சி கவிழ்ப்பு எதற்கு என்று யோசிக்க வேண்டும். புதுச்சேரி ஒரு ஒத்திகையே. தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஒருவேளை திமுக ஆட்சி அமைந்தால் அதை கவிழ்க்க முடியும் என்பதை உணர்த்தக்கூடிய நடவடிக்கை தான் இது.
பாஜகவின் செயல் ஆபத்தான போக்கு. திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஞானதோயம் வந்துவிட்டது? கட்சி தாவல் சட்டம் தடுக்கிறது என்பதால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகின்றனர்.
நான் ஏற்கனவே சொன்னது போல அதிமுகவை பாஜக அழிக்க போகிறது. இரட்டை இலையில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பாஜகவுக்கு போக போகிறார்கள். ஆனால் தமிழகத்தில் என்ன முயற்சித்தாலும் பாஜக பருப்பு வேகாது. ஆள் பிடிப்பதால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று பேசி உள்ளார்.