பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெளியானது தீர்ப்பு…! அத்வானி உள்ளிட்ட 32 பேரும் விடுதலை
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றம்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி 1992ம் ஆண்டு டிசம்பர் 6ல் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டு இருந்த 49 பேரில் 17 பேர் முன்னதாகவே இறந்து விட்டனர்.
எஞ்சிய 32 பேரில் 26 பேர் லக்னோ சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி. உமாபாரதி, கல்யாண் சிங் உள்ளிட்ட 6 பேர் காணொளி மூலம் ஆஜராகினர்.
இந் நிலையில் லக்னோ சிபிஐ நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 2,000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வாசித்தார். அதில், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை.
எனவே, அத்வானி, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்பட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக கூறினர். அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிட்டது அல்ல என்றும், மசூதியை இடிக்கவிடாமல் தலைவர்கள் தடுக்க முயன்றனர் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகாலம் நீட்டித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுத்துள்ளது நீதிமன்றம்.