ரூ.20க்கு தேசியக்கொடி வாங்கினால் தான் ரேஷனில் பொருள்…! கதறும் மக்கள்
சண்டிகர்: 20 ரூபாய் கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் தரப்படும் என்று கூறியதால் ஹரியானாவில் மக்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளனர்.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி தேசப்பற்றை காட்ட வேண்டும் என்று பாஜக அறிவித்துள்ளது. அதை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் யாருடைய டி.பியை பார்த்தாலும் தேசியக் கொடி தான் தெரிகிறது.
நாட்டு மக்களின் சுதந்திர வேட்கை ஒரு பக்கம் இருந்தாலும் இப்படி செய்தால் தேசப்பற்று வந்துவிடுமா? என்று கேள்வி கேட்கும் ஆட்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அதே நேரத்தில் டிசைன், டிசைனாக தேசப்பற்றை மக்களுக்கு திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதுப்புது பிரச்னைகள் வெடித்துள்ளன.
அதில் ஒன்று தான் ரேஷன் கடைகளில் விற்கப்படும் தேசியக்கொடிகளை 20 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் ரேஷன் பொருட்கள் தரப்படும் என்பது. இந்த நிலைமை காணப்படும் மாநிலம் ஹரியானா. டுவிட்டரில் இப்படி ஒரு வீடியோ ஓடி அனைவரையும் பரபரப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
கர்னல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் தான் இப்படி ஒரு நிலைமை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. 20 ரூபாய் தந்தால் ரேஷனில் பொருள் தருகிறேன் என்று கடை விற்பனையாளர் கூறுகிறார் என்று பயனாளி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி உள்ளது.
சமூகவலைதளத்தில் பரவும் இந்த வீடியோவில் பணமே இல்லாமல் இருக்கும் எங்களிடம் இப்படி கட்டாயப்படுத்தினால் நாங்கள் எங்கு போவது? என்று கதறியபடி பாதிக்கப்பட்டவர்கள் பேசி இருக்கின்றனர். ஏழை மக்களின் பசியை போக்குவது ரேஷன் கடைகள் தான். ஆனால் அங்கும் இப்படி செய்தால் என்ன அர்த்தம் என்பதே நடுநிலையாளர்களின் கேள்வியாக உள்ளது.