அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு…! இதோ வந்தாச்சு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையின் எதிரொலியாக 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.
மிக்ஜாமை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஜாம் ஆக்கிவிட்டது. தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை எதிரொலியாக குடியிருப்புகளில் உள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நிவாரண முகாம்களாக பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு நாளை அரையாண்டு பொதுத்தேர்வு அறிவித்தப்படி நடக்க வேண்டும். ஆனால் இந்த தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளார். மேற்கண்ட 4 மாவட்ட பள்ளிகளிலும் வினாத்தாளை தலைமை ஆசிரியர்களே தயாரித்து பின்னர் தேர்வு நடத்தவும் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறி உள்ளார்.
4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அறிவித்தப்படி அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.