Sunday, May 04 11:43 am

Breaking News

Trending News :

no image

ஓபிஎஸ் வீட்டை அடிச்சு நொறுக்குவோம்…! தொண்டர்களிடம் ஜெர்க் காட்டிய முன்னாள் அமைச்சர்


அதிமுக ஆபிசை அடித்து நொறுக்கினீர்கள்? உங்கள் வீட்டை சூறையாட எங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று ஓபிஎஸ்சை சீண்டியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு என தமிழக அரசை கண்டித்து அதிமுக தொடர் போராட்டங்களில் இறங்கி இருக்கிறது. மாவட்டம் தோறும் அதிமுகவினர் கண்டன முழக்கமிட்டு திமுக தலைமையிலான அரசை தாளித்து வருகின்றனர்.

இந் நிலையில் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பன்னீர்செல்வம் வகித்த சட்டசபை துணை தலைவர் பதவியை வகிக்கும் உதயகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனால் தான் என்னவோ ஓபிஎஸ்சை தமது பேச்சில் காய்ச்சி எடுத்து இருக்கிறார் உதயகுமார்.

அவர் பேசியது இதுதான்: விசுவானமான மக்கள் கொண்ட தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் போன்று துரோகிகள் இருப்பதுதான் வருத்தம். துரோகமாக சிரித்து, சிரித்து சுயநலத்துக்காக செயல்பட்டவர்.

அவரது மகன் தொண்டர்களின் உழைப்பால் எம்பியானவர். அவர் மறுபடியும் ஜெயித்தால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். தலைமை கழகத்தில் ஓபிஎஸ் நடத்திய வன்முறையை மக்கள் மறக்க மாட்டார்கள்.

கங்கையில் குளித்தாலும் உங்களின் பாவம் போகாது. ரவுடிகளை கூட்டி வந்து தலைமை அலுவலகத்தை சூறையாடினீர்கள். உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரம் ஆகும்? அவர் முதலமைச்சராக இருந்த போது சொந்த மாவட்டமான தேனியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை என்று பேசினார்.

அவரது பேச்சை கேட்ட அதிமுகவினர் சிலர், ஓபிஎஸ் வகித்த பதவியில் இப்போது இருப்பதால் இஷ்டம் போல பேசுகிறார், கட்சியில் ஓபிஎஸ்சிடம் அவர் ஒரு காலத்தில் எப்படி இருந்தார் என்பதை மறந்துவிட்டார் என்று முணுமுணுத்தபடியே சென்றனர்.

Most Popular