ஸ்டாலின் சொன்ன ‘வார்த்தை’…! கோவை திமுகவினர் ‘செம’ அப்செட்…!
சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசிய ஒரு வார்த்தையால் கோவை திமுகவினர் செம வருத்தத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் திமுகவுக்கு சட்டசபை தேர்தல் அபார வெற்றி கிடைத்தது. ஆனால் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை. தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்தும், கோவை மாவட்டத்தில் திமுகவால் கோட்டையை பிடிக்க முடியவில்லை.
என்ன தான் தமிழகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கோவை மாவட்டத்தில் திமுகவின் தோல்வி இந்த முறை ஸ்டாலின் ரொம்பவும் அப்செட் ஆக்கியது. எப்படியாவது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கோவை திமுகவினர் உள்ள நிலையில் அவர்களை பயங்கர மன வருத்தத்தில் ஆக்கி இருக்கிறது ஸ்டாலின் பேச்சு.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார். அவருடன் ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்தனர். அவர்கள் தவிர திமுகவில் இணைய இருக்கும் 11,188 பேர் பற்றிய விவரங்களை மகேந்திரன் திமுகவிடம் நேற்று ஓப்படைத்தார்.
தமது அரசியல் பயணம், மநீமவில் இருந்து வெளியேறிய காரணம், என்ன பொறுப்பு வேண்டும் என்று இணைப்பு விழாவில் மகேந்திரன் பேசினார். அனைத்தையும் கூர்ந்து கவனித்த ஸ்டாலினும் பேசி இருக்கிறார். அவரது பேச்சு தான் கோவை திமுகவை வருத்தப்பட வைத்துள்ளது.
ஸ்டாலின் பேசியது இதுதான்: தேர்தல் தேதி அறிவித்த தருணத்திலேயே இவருக்காக(மகேந்திரன்) எதிர்பார்த்து இருந்தேன். இப்போது கொஞ்சம் லேட்.. அவ்வளவுதான். லேட்டாக வந்தாலும் மகேந்திரன் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
சட்டசபை தேர்தலுக்கு முன்னால் இவர் வந்திருந்தால் நாம் மிக பெரிய வெற்றியை கோவையில் பெற்றிருக்க முடியும். சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களில் ஜெயிக்க முடியாமல் போனது வருத்தம். மகேந்திரன் முன்னரே வந்திருந்தால் எனக்கு அந்த கவலையும் இல்லாமல் போயிருக்கும் என்று பேசி இருக்கிறார்.
ஸ்டாலினின் இந்த பேச்சு தான் இப்போது கோவை திமுக மத்தியில் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியலில் 2 ஆண்டுகளே அனுபவம் உள்ள மகேந்திரன் திமுகவில் முன்னரே சேர்ந்திருந்தால் கோவை மாவட்டத்தை திமுக கைப்பற்றி இருக்கும் என்று பேசியது வருத்தமளிக்கிறது என்று முன்னணி நிர்வாகிகள் கூறி இருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் திமுக செயல்பாடுகள் விமர்சனத்துக்கு ஆளாகி இருந்தாலும், பல தொகுதிகளில் மநீம வாக்குகள் திமுகவின் வெற்றியை பாதித்தன. உதாரணத்துக்கு, கோவை சிங்காநல்லூர் தொகுதியை எடுத்துக் கொள்ளலாம்… இந்த தொகுதியில் தான் சிட்டிங் எம்எல்ஏ கார்த்திக் தோற்று போனார். அவர் பெற்ற வாக்குகள் 70,390. இதே தொகுதியில் மநீம வேட்பாளராக இறங்கிய மகேந்திரன் பெற்றது 36,655 வாக்குகள்.
திமுக, அதிமுக வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் 10,854. இப்போது கூட்டி கழித்து பாருங்கள்… திமுக யாரால் தோற்றது தெரியும் என்கின்றனர் உடன்பிறப்புகள். திமுகவின் தோல்விக்கு மநீம வாக்குகளும் ஒரு முக்கிய காரணம் என்ற நிலையில் அவரை உயர்த்தி பேசியது எப்படி ஏற்றுக் கொள்வது என்கின்றனர் கோவை திமுகவினர்.
ஆக மொத்தம்… கட்சியில் இணைந்துவிட்டார் மகேந்திரன். கோவையில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்? அவருடன் ஏற்கனவே திமுகவில் ஆண்டுகள் பல ஆனாலும் அரசியல் செய்து கொண்டு இருக்கும் சீனியர்கள் எப்படி பயணிப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கின்றனர் அதிமுகவினர்….!