அப்பளத்தால் கல்யாணத்துக்கு வந்த சோதனை…! ரணகளமான திருமண மேடை
ஆலப்புழா: கேரளாவில் ஒரேயொரு அப்பளம் கேட்டதால் கல்யாண மேடையே கலவர மேடையான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ஆலப்புழா மாவட்டம் முட்டத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் திருமண வைபவம் ஜோராக போய் கொண்டிருந்தது. கல்யாணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தும் களைகட்டி இருந்தது.
விருந்து நிகழ்ச்சியில் மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு இருந்தார். கல்யாண சாப்பாட்டின் ருசி அவரை எழுந்திரிக்க விடாமல் செய்ததோ என்னவோ, கூடுதல் ஒரு அப்பளத்தை கேட்டு உள்ளார்.
அங்கு தான் பிரச்னையே… 2வது முறை அப்பளமா என கேட்க போய் அது வாக்குவாதம், சண்டை என்று தடம்மாறியது. மணமகன் தரப்பினரும், மணமகள் தரப்பினரும் மண்டபத்திலேயே அடிதடியில் இறங்கி இருக்கின்றனர்.
மண்டபத்தில் இருந்து டேபிள், சேர்கள் பறந்திருக்கின்றன. அங்கிருந்த அனைத்து பொருட்களும் அடித்து உடைக்கப்பட்டன. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கல்யாண கோஷ்டியை மண்டப உரிமையாளர் முரளிதரன் என்பவர் கேள்வி கேட்க, அனைவரையும் நைய புடைத்து அனுப்பி இருக்கிறது கல்யாண கோஷ்டி. 3 பேருக்கு மரண அடி விழுக அவர்கள் இப்போது மருத்துவமனையில் உள்ளனர்.
திருமண மண்டபம் கலவர மண்டபமாக மாறி போக, வாழ்த்த வந்தவர்கள் வழி எங்கே என்று தேடி ஓடினர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 15 பேரை தேடி வருகின்றனர்.