பீஸ் கேட்டு நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள்..! இதோ.. இந்த இ-மெயிலில் புகார் தரலாம்
சென்னை: தனியார் பள்ளிகள் முழுமையான கட்டணத்தை கேட்டால் இ மெயிலில் புகார் தரலாம் என்று சென்னை ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடையே இயல்பு நிலையை கொண்டு வர, நாடு முழுவதும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்திலும் இயல்பு நிலை உருவாக்க தமிழக அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பேருந்து மற்றும் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இவை ஒரு பக்கம் இருந்தாலும் மறு பக்கம் பொருளாதார சிக்கலில் மக்கள் தவியாய், தவித்து வருகின்றனர்.
இந் நிலையில், தனியார் பள்ளிகள் முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் சென்னையில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அதிகமாகி உள்ளன.
இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி, முழு கல்விக்கட்டணத்தையும் செலுத்துமாறு பள்ளிகள் நெருக்கடி தந்தால் புகார் தரலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதற்காக feescomplaintcell@gmail.com என்ற இ மெயில் ஐடியையும் அறிவித்து உள்ளது. பீஸ் கேட்டு பள்ளிகள் தொந்தரவு செய்தால் மேற்கண்ட இ மெயிலில் புகார் தரலாம், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.