திமுகவுக்கு எதிராக நாட்டாமை…? பாஜகவின் புது ப்ளான்
நாடாளுமன்ற தேர்தல் 2024 பரபரப்பு மெல்ல, மெல்ல வேகம் எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகம் கவனத்தை செலுத்தி வரும் பாஜக, இந்த முறை எப்படியும் 2 இலக்க எம்பிக்களை பெற்றுவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கி இருக்கிறது.
அதிமுக எப்படியும் வந்துவிடும், கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிடலாம் என்றும் கணக்கு பண்ணி வருகிறது. ஆனால் அதிமுகவோ பாஜகவுக்கு டாட்டா காட்டி, வேறு லெவலில் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டது. தமது தலைமையிலான கூட்டணியில் கட்சிகளை சேர்த்து வருகிறது.
கூட்டணி மேகங்கள் திரண்டு வரும் இத்தருணத்தில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கை கோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 2 நாட்கள் முன்பு, அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அக்கட்சியின் சரத்குமார். திடீரென பாஜகவுடன் கூட்டணி என்று அறிவித்ததன் பின்னணியில் உள்ள தகவல்கள் மலைக்க வைப்பதாக இருக்கிறது.
அதிமுக பேச்சுவார்த்தை நடத்திய அடுத்த நாளே பாஜகவினரும் சரத்திடம் மீட்டிங் போட்டுள்ளனர். இதில் முக்கிய விஷயங்கள், ஆலோசனைகள் நடக்க… அதைடுத்து அறிக்கை ஒன்றை விடுத்து பாஜக கூட்டணியில் இணைந்து விட்டதை சரத் அறிவித்துவிட்டார்.
முதல் நாள் அதிமுக, அடுத்த நாள் பாஜக என்று கூட்டணியை எப்படி டீல் செய்தார் என்று பலரும் நினைத்திருக்க, அதன் பின்னணி விஷயங்கள் வேறு விதமாக உள்ளன. தொகுதிகள் பங்கீடு, சாதி பலம், பிரபல நடிகர் என பல பிளஸ் பாயிண்ட்டுகள் இருப்பதால் சரத்தை பாஜக வளைத்திருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இது தவிர மேலும் ஒரு தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவை எதிர்க்க வலுவான மற்றும் பிரபலமான முகம் தேவை என்றும், அதற்கு சரியான சாய்ஸ் சரத் தான் என்றும் பாஜக நம்புவதாக கூறப்படுகிறது. அதுவே பாஜக கூட்டணியில் சமக இணைய காரணமாக அமைந்துவிட்டது என்றும் தகவல் கூறப்படுகிறது.
திமுகவுக்கு எதிரான பாஜகவின் இந்த தேர்தல் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனால் பாஜகவின் இந்த தேர்தல் மூவ், அதிமுகவுக்கு பிடிக்கவில்லை என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று.