ஆன்லைப் வகுப்பில் ஷாக்…! ஹெட்செட் வெடித்ததில் இளைஞர் பலி….
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஹெட்செட் வெடித்ததில் ஆன்லைன் வகுப்பில் படித்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள உதய்புரியா கிராமத்தில் சோமு நகரை சேர்ந்தவர் ராகேஷ்குமார் நாகர். 28 வயதான இளைஞர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்.
தமது வீட்டில் இருந்த போது காதில் ஹெட்செட் அணிந்து போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஹெட் செட் வெடித்ததில் சுயநினைவற்ற நிலைக்கு போனார்.
இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராகேஷ்குமார் உயிரிழந்துவிட்டார். காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவமனைக்கு ராகேஷ் குமார் கொண்டு வரப்பட்ட போதே அவருக்கு சுயநினைவு இல்லை. சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ராகேஷ்குமாருக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த சமயத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.