தரையில் உட்கார்ந்த கனிமொழி…! நீதி கேட்டு எழுந்த குரல்
டெல்லி: பாதுகாப்பு குறைபாடு சம்பவத்தில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 15 பேரும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
மக்களவை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் போதே பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர் வண்ணபுகை குண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பில் கொண்டு போய் விட்டிருக்கிறது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் யார், அனுமதி சீட்டு யார் தந்தது? என்று தோண்டி துருவ… விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது.
அனுமதி சீட்டு தந்தது மைசூரு பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா என்பது தெரிந்தது. இந்த சம்பவத்தில் பாஜக அமுக்கி வாசிப்பதாகவும், ஊடகங்கள் மவுனம் காத்து விஷயத்தை பத்தோட ஒண்ணு, அத்தோட இதுவும் ஒண்ணு என்று கண்டு கொள்ளாமல் விட்டதாக ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.
இந் நிலையில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட 15 பேர் இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.
இதனால் மக்களவையில் பெரும் அமளி துமளி ஏற்பட தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டே வந்தது. ஒரு கட்டத்தில் மீண்டும் அவை கூடிய போது திமுக எம்பி கனிமொழி, எஸ்ஆர் பார்த்திபன், எஸ் வெங்கடேசன், மாணிக் தாகூர் உள்ளிட்ட 15 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து, அவர்கள் நாடாளுமன்ற அவை வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்தனர். நாடாளுமன்றம் மரபுப்படியும், கருத்து விவாதத்தின் படியும் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.