காவிமயமாகிறதா கல்வி தொலைக்காட்சி…? சர்ச்சையான நியமனம்
சென்னை: பள்ளிக்கல்வி துறையை சாராத ஒருவர் கல்வி தொலைக்காட்சியின் சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மாணவர்களின் கற்றலை மேலும் மேம்படுத்தும் பொருட்டு கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. அப்போது முதல் இந்த தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வித்துறையை சார்ந்த அதிகாரிகளே நிர்வகித்து வந்தனர்.
ஆனால் இப்போது முதல்முறையாக பள்ளிக்கல்வித்துறையை சாராத ஒரு நபர் முதன்மை செயல் அலுவலராக (CEO) நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவரது பெயர் மணிகண்ட பூபதி. மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஊதியம் அளிக்கப்படும் என்றும், அவரது செயல்பாடுகளை பொறுத்து அவருக்கான பணி நீட்டிக்கப்படும் என்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவித்து இருக்கிறது.
சிசிஓவாக நியமனம் செய்யப்பட்டுள்ள மணிகண்ட பூபதியின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
மணிகண்ட பூபதி இதற்கு முன்னதாக வலதுசாரி சிந்தையாளரான பிரபல பத்திரிகையாளர் நடத்தி வரும் யூடியூப் சேனலின் இணை நிறுவனராக இருந்தவர். அதற்கு முன்பு பிரபல நாளிதழில் 3 ஆண்டுகள், மக்கள் மனம் கவர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு, பத்திரிகையாளரின் யூடியூப் சேனலை உருவாக்கியவர்.
அவரின் நியமனம் குறித்து அறிவிப்பு தொடக்கத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதன் பின்னரே அவரது பின்னணி விவரங்கள் என்ன என்பது வெளியாகி இணையத்தில் இப்போது பெரும் பேசுபொருளாகி மாறி விட்டது.
மாணவர்களின் கல்விக்காக தொடங்கப்பட்ட தொலைக்காட்சியில், கல்வித்துறை சார்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் தற்போது வலுத்து வருகின்றன.