Sunday, May 04 11:44 am

Breaking News

Trending News :

no image

அண்ணாமலை வேட்புமனு செல்லாதா…? நடப்பது என்ன..?


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை நாடாளுமன்ற தொகுதி பாஜக அண்ணாமலையின் வேட்பு மனு விவரங்கள், அவருக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே பெரும் தலைவலியாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் தாமரையை மலர வைத்தாக வேண்டும் என்று பாஜக டெல்லி மேலிடம் பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது. 2024 லோக்சபா தேர்தலில் அதிமுகவை கூட்டணியில் இணைக்க முயன்று தோற்றுபோய், இப்போது தனி அணி அமைத்து களம் காண்கிறது.

முக்கிய தலைவர்களை முக்கிய தொகுதிகளில் வேட்பாளர்களாக டெல்லி மேலிடம் இறக்கி உள்ளது. அதில் முக்கியமானவராக project செய்யப்பட்டவர் அண்ணாமலை. தமிழக பாஜக தலைவராக உள்ள அவர், கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இறக்கி விடப்பட்டு உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கி உள்ள அவரால் இப்போது கட்சி தலைமையே பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக தெரிகிறது. காரணம்… கோவை தொகுதி வேட்பாளருக்கு அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுதான்.

முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதாவது மாற்று வேட்பு மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கின்றனர். ஆனால் அண்ணாமலை மட்டும் ஒரேயொரு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவும் பல கட்ட வலியுறுத்தல்களுக்கு பின்னரே நேற்றிரவு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது.

இந்த வேட்பு மனுவில் பல குளறுபடிகள் உள்ளதாக இன்றைய பரிசீலனையின் போது கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக, நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

ஆட்சேபனைக்கான காரணம் இதுதான்: ஒரு வேட்பாளர் வேட்பு மனுவை indian non judicial பத்திரம் மூலம் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் விதிமுறை. ஆனால் நீதிமன்ற பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் india court fee என்ற பத்திரத்தில் அண்ணாமலை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இப்படி செய்வது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இந்த வேட்பு மனு குளறுபடிகளை அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் பரிசீலனையின் போது சுட்டிக்காட்டி, மனுவை ஏற்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்ட அரங்கில் பெரும் கூச்சல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் கப்சிப் என்று அடக்கி வாசித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தல் அதிகாரி எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் மனுவை ஏற்றுக் கொண்டுள்ளார். இதை கடுமையாக ஆட்சேபித்துள்ள அதிமுக தரப்பு, நீதிமன்றத்தை நாட போவதாக அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகும் பட்சத்தில் வேட்பு மனு நிராகரிக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் கருத்துகள் வெளியாகி இருக்கின்றன. ஒருவேளை வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால், அதன் தாக்கம் பாஜகவில் வேறுவிதமாகவே இருக்கும் என்பது மட்டும் நிஜம்.

இந்த செய்தியின் கீழே அதிமுக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணனின் பேட்டி முழு விவரங்களுக்காக இணைக்கப்பட்டு உள்ளது.

Most Popular