தலித் என்பதால் தனபாலை ஏற்க மறுத்ததா ஈபிஎஸ் அணி..? அதிமுகவில் நிகழ்ந்த டுவிஸ்ட்…!
சென்னை: கொங்கு மண்டலத்தை சேர்ந்தவுர், முன்னாள் சபாநாயகர், தலித் பிரமுகர் தனபாலை ஏற்க மறுத்து, எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக அதிமுக முகாமில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நடந்த பரபர மோதல் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதற்காக நடத்தப்பட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு 65 இடங்களே கிடைத்தது. முடிவுகள் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை பேச..நாளை சட்டசபையின் முதல் கூட்டம் என்பதால் எதிர்க்கட்சி தலைவரை இன்றே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது அதிமுக.
காலை 10 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூடியதும், இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தில் குவிய தொடங்கினர். கொரோனா கால ஊரடங்கு என்பதால் கூட்டமாக யாருமாக நிற்கக்கூடாது. ஆனாலும் இரு தலைவர்களும் தொண்டர்களை அறிவுறுத்தியதாக தெரியவில்லை.
இந்த கூட்டத்தில் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, வைத்திலிங்கம் ஆகிய எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியும் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த அதே காரசார விவாதமும் இன்றும் தொடர்ந்ததாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் யாரும் தம்மை எதிர்க்கட்சி தலைவராக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த ஓபிஎஸ் திடீரென அவினாசி எம்எல்ஏவும், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த கட்சியின் சீனியர், முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்க்கட்சி தலைவருக்கு முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்சின் இந்த தடாலடி நடவடிக்கையால் ஒரு பக்கம் இபிஎஸ்சும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் திணறி போய் இருக்க, கூட்டத்தில் பரபரப்பான நிலைமை காணப்பட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் அதிருப்தியுடன் வெளியேறிவிட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அதே நேரத்தில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பகீரத பிரயத்தனம் செய்தும், கொங்கு மண்டல எம்எல்ஏக்களின் ஆதரவாலும் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராகி விட்டார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சர் வேட்பாளர் போட்டியில் தோற்ற ஓபிஎஸ், இப்போது எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் சறுக்கிவிட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.