செலவு தமிழ்நாடு… மோடி படம் போடணுமா…? தரமான சம்பவம் செய்த திமுக
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக செலவினம் முழுதும் தமிழக அரசின் உடையது என்று திமுகவின் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி கூறி உள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று பேசும் அளவுக்கு தமிழக அரசு செய்து வருகிறது.
ஒலிம்பியாட் தொடர் பற்றிய விழிப்புணர்வையும், விளம்பரங்களையும் கிட்டத்தட்ட 1 வாரம் முன்பிருந்தே தமிழக அரசு தொடங்கியது. நாளை போட்டி நடக்க உள்ள நிலையில், போஸ்டரில் பிரதமர் மோடி போட்டோ இல்லை என்று பாஜக எதிர்ப்பை காட்ட ஆரம்பித்துள்ளது.
நாட்டின் பிரதமர் போட்டோ ஏன் கிடையாது என்று தனித்துவமாக கிளம்பிய பாஜகவினர், போஸ்டர்களில் மோடி படத்தை ஒட்டி வருகின்றனர். எங்கு போட்டோ ஒட்டப்படுகிறதோ அங்கு செல்லும் தபெதிகவினர் அந்த போட்டேவை கருப்பு மை கொண்டு அழித்தபடியே செல்கின்றனர்.
நிலைமை இப்படியே இருக்க… ஏன் பிரதமர் மோடி படம் போஸ்டரில் இல்லை என்று திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜிவ் காந்தி டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மாமல்லபுரம் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடி படம் ஏன் இல்லை என்று கூறி பாஜக ஸ்டிக்கர் விளம்பரத்தை ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பாஜகவினரும், பொதுமக்களும் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு செஸ் மையம் இந்த தொடரை இந்தியாவில் நடத்தலாம் என்று சொன்ன போது நாட்டில் எந்த மாநிலமும் இதை நடத்த தயாராகவில்லை.
அப்போது முதல்வர் ஸ்டாலின் நாங்கள் நடத்துகிறோம், ஏன் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் போன்ற பெரிய சாம்பியன்களை உருவாக்கி உள்ளோம். தெரு தெருவாக செஸ் விளையாட்டை கொண்டுபோய் சேர்க்க உள்ளோம்.
மன அமைதிக்கும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கவும் 100 கோடி ரூபாய் செலவு பண்ணி தொடரை நடத்துவதாக கூறினார். இந்தியாவில் எந்த மாநிலமும், குஜராத் உள்பட பாஜக ஆளும் மாநிலங்கள் கூட இந்த போட்டியை நடத்த முன்வரவில்லை.
அதை நிராகரித்த போது நான் நடத்துகிறேன் என்று சொல்லி போராடி, 100 கோடி ரூபாய் செலவு செய்து நடத்துற அரசு தமிழ்நாடு அரசு. அதனால் தான் தமிழக அரசு விளம்பரத்தில் முதல்வர் படம் மட்டுமே உள்ளது. தமிழக அரசின் இலட்சினையும் இருக்கிறது.
நாட்டின் பிரதமர் என்ற முறையில், பன்னாட்டு விளையாட்டு என்ற முறையில் உலக நாடுகளின் வீரர்கள் வர உள்ளதால் பிரதமர் மோடியை தமிழக அரசு அழைத்துள்ளது.
ஆனால் எல்லா விளம்பரத்திலும் மோடி ஸ்டிக்கர் ஒட்டுகிறது பாஜக. எப்படியும் தமிழக அரசின் ஸ்டிக்கர்களில் இப்படி ஒட்டுவதை காவல்துறை உறுதியாக கைது செய்யும். பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் என்ற அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்.
பிரதமர் மோடி படத்தை போடலை என்று ஆதாயம் விளம்பரம் தேடும் பாஜகவுக்கும், மக்களுக்கும் உரக்க சொல்வோம். இது தமிழ்நாடு அரசே போராடி, தமிழ்நாடு அரசே சொந்த பணத்தில் நடத்தும் ஒரு விழா.
இதுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதன் பெருமை தமிழ்நாடு அரசின் முதல்வருக்கும் தான் போய் சேருமோ ஒழிய, மோடி மஸ்தான்களுக்கு போய் சேராது என்று கூறி உள்ளார்.