டெய்லி ரூ.150 இருந்தால் போதும்… 60 வயதில் ரூ.1 கோடி கிடைக்கும்… எப்படி..?
சென்னை: தினசரி 150 ரூபாய் சேமித்தால் போதும், 60 வயதில் 1 கோடி ரூபாய்க்கு அதிபதியாகலாம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இளமை காலம் என்பது முதுமை காலத்துக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துக் கொள்ளும் முக்கியமான காலம் ஆகும். இளமையில் பொருள் தேடி, ஓடி சேமித்து அதன் பலனை வயதான காலத்தில் அனுபவிக்கலாம். ஒவ்வொருவரும் தமது இளமை காலத்தில் ஓய்வு காலத்துக்கான முதலீட்டை பற்றி சிந்திக்க வேண்டும்.
எதிர்காலம் பற்றிய நினைப்பு இன்று பலருக்கும் பலவிதமாக நோக்கங்களுடன் இருக்கிறது. படிப்பு, திருமணம், சொத்தில் முதலீடு என பல முறை யோசித்து ஒவ்வொருவரும் சேமித்து வருகின்றனர். இதுபோன்ற இன்றைய முதலீடு, நாளைய சேமிப்பு என்பதற்கு ஏற்ப மத்திய அரசானது ஒரு சிறப்பான முதலீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் பெயர் என்பிஎஸ்.. அதாவது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (national pension system) இந்த திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. இதில் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள், ஓய்வூதியம் பெற முடியாதவர்கள் முதலீடு செய்யலாம்.
என்பிஎஸ் எப்படி என்று பார்ப்போம்… ஒருவர் தினசரி ரூ. 150 முதலீடு செய்கிறார். மாதம் 4500 ரூபாய் என்று கணக்கு வைத்து கொள்வோம். 25 வயதில் இந்த திட்டத்தில் சேர்ந்து 60 வயது வரை முதலீடு செய்கிறார். வருஷத்துக்கு 8 சதவீதம் லாபன் என்றால் கூட 60 வயதில் ஒரு கோடி ரூபாய் வருமானம் பெறலாம்.
மொத்த முதலீடு 18,90,000 ரூபாய் என்னும்பட்சத்தில் 60 வயதில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம் மட்டும் ரூ.83.67 லட்சம். ஒட்டு மொத்தமாக கூட்டி பார்த்தால் ரூ.1. 02 கோடியாகும். இந்த பென்ஷன் தொகையில் 60 சதவீதம் திரும்ப பெறலாம்.
40 சதவீதம் நீங்கள் வருடாந்திர திட்டத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் மாதம்தோறும் ஒரு வருமானம் கிடைக்கும். 8 சதவீதம் வட்டி என்று வைத்துக் கொண்டால் கூட மாதம், வட்டி மட்டும் ரூ.27,353. இதை 60 சதவீதம் என்ற அடிப்படையில் ரூபாயாக 61.54 லட்சமாக எடுத்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தத்தில் இளமையில் சேமித்தால் முதுமையில், ஓய்வு காலத்தில் கணிசமாக தொகையை பெற முடியும்.