Sunday, May 04 12:15 pm

Breaking News

Trending News :

no image

மானம் போகுது மா.சு….! வீடியோ போட்ட Mr. பொதுசனம்


சென்னை: அமைச்சர் தொகுதி, அதிலும் அவரது வார்டு நிலைமையை பாருங்க என்று இளைஞர் ஒருவர் வெளியிட்டு உள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பை சீர் செய்ய அரசும், அமைச்சர்கள், அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். எதிர்பார்ப்பை பொய்யாக்கி பெய்த பேய் மழையால் மீட்பு பணிகளில் தாமதம் என்றாலும், பல பகுதிகளில் எந்த நிவாரண நடவடிக்கைகளும் இல்லை என்ற குரல்களும் எழ ஆரம்பித்துள்ளன.

அதன் நிஜம் என்று கூறும் வகையில் மழைவிட்டு 2 நாட்கள் ஆகியும் அவதிப்படுகிறோம் என்று அமைச்சர் தொகுதியில் இருந்து ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் தொகுதி சைதாப்பேட்டையை சேர்ந்த அவரின் வீடியோ தான் இப்போது வைரல்.

இது குறித்து அவர் வீடியோவில் கூறி இருப்பதாவது: சுகாதார துறை அமைச்சரின் தொகுதி இது, இத்தனைக்கு அவரோட வார்டு. 168வது வார்டு, ஒரு ப்ளீச்சிங் பவுடர் போடவில்லை, 2000 பேர் சிரமப்படுகிறோம், மக்களுக்கு என்ன தேவை என்று பார்க்கவில்லை என்று ஆவேசமாக பேசி பொங்கி உள்ளார்.

பகுதி முழுவதும் குப்பைகள் நிரம்பியும், அசுத்தமாகவும் நாறி போய் கிடக்கிறது, குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள், அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இணையத்தில் பரவி உள்ள இந்த வீடியோவை பார்க்கும் பலரும் ஆளுக்கு ஒரு விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். அமைச்சர் தொகுதியே இப்படியா? 4000 கோடி என்னாச்சு? என்று போட்டு தாக்குகின்றனர்.

அதே நேரத்தில் இதை மறுக்கும் திமுகவினர், அரசு நிர்வாகம் முழுமையாக இயங்குகிறது என்றும், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நெருப்புமேடு, செட்டித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய விவரத்தை கூறுகின்றனர்.

Most Popular