சசிகலாவால் உசுருக்கு ஆபத்து…! போலீஸ் ஸ்டேஷன் போன அதிமுக முன்னாள் அமைச்சர்…!
திண்டிவனம்: சசிகலாவால் தமது உயிருக்கு ஆபத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் போலீசில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சசிகலா பற்றி தான் பரபரப்பு பேச்சு. அதிமுக தொண்டர்களிடம் அவர் பேசியதாக பல தொலைபேசி ஆடியோக்கள் வெளியாகின. தொண்டர்களை அமைதிப்படுத்தி நலன் விசாரிக்கும் சசிகலா, அதிமுகவில் நடக்கும் அனைத்தையும் பார்த்து கொண்டு இருப்பதாகவும், விரைவில் திரும்ப அரசியலுக்கு வருவேன், கவலை வேண்டாம் என்று கூறியிருந்தார்.
இப்படி புதிது, புதிதாக போன் உரையாடல்கள் வெளிவந்தது, அதிமுக முகாமை ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு போயிருக்கிறது. அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அப்படித்தான் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியிருந்தார். கருவாடு மீனாகிவிடாது என்று காளிமுத்து சொன்னார். ஆனால் கருவாடு கூட மீனாகிவிடலாம், ஆனால் சசிகலா ஒருநாளும் அதிமுகவுக்குள் நுழைய முடியாது. ஒன்று அல்ல, ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று பேசியிருந்தார்.
அவ்வளவு தான்…. இந்த பேட்டி வந்த நாள் முதல் சிவி சண்முகத்துக்கு மிரட்டல் வர ஆரம்பித்து இருக்கிறதாம். தொலைபேசியில், சமூக வலைதளங்களில் அவருக்கு இஷ்டத்துக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றனவாம்.
பொறுத்து பொறுத்து பார்த்த சிவி சண்முகம், மிரட்டல்கள் கட்டுக் கடங்காமல் போக, திண்டிவனத்தில் உள்ள ரோசணை காவல் நிலையத்துக்கு சென்றிருக்கிறார். இன்ஸ்பெக்டர் வள்ளியை சந்தித்து தமது உயிருக்கு சசிகலா தரப்பில் இருந்து ஆபத்து இருப்பதாகவும், தம்மை மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்திருக்கிறார். புகாரில் அவர் கூறியிருக்கும் விவரம் இதுதான்: ஜூன் 7ம் தேதி சசிகலா குறித்து சில கருத்துகளை ஊடகங்களிடம் பேட்டியாகக் கொடுத்தேன். அதற்கு சசிகலா நேரடியாக பதிலளிக்காமல், அடியாட்களை வைத்து கைப்பேசி மற்றும் சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள்.
கைப்பேசியில் என்னை அச்சுறுத்தும் வகையில், கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இன்றுவரை சுமார் 500 போன் அழைப்புகள் செய்துள்ளனர். இன்னும் கைப்பேசி, சமூக ஊடகங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
சசிகலா பற்றிப் பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். இதற்கு சசிகலாவின் தூண்டுதல் தான் காரணம். எனவே சசிகலா மற்றும் எனது அலைப்பேசிக்குக் கால் செய்த மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.