ஷமியை கூப்பிட்ட பிரதமர் மோடி…! வைரல் வீடியோ ரிலீஸ்
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை பிரதமர் மோடி சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
அண்மையில் முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரை யாரும் மறக்க முடியாது. இறுதி போட்டியில் இந்தியாவை சொல்லியடித்தபடி ஆஸ்திரேலியா தோற்கடித்து கோப்பையை அள்ளியது. அணி தோற்றது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த இறுதி போட்டியை நேரில் சென்று பிரதமர் மோடியும், அமைச்சர் அமித் ஷாவும் கண்டுகளித்தனர்.
இந் நிலையில், போட்டி முடிந்த பின்னர், ஓய்வு அறையில் இருந்த இந்திய அணி வீரர்களை பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது.
ரோகித், கோலி என ஒவ்வொரு வீரரையும் சந்தித்த அவர், தொடர்ந்து 10 ஆட்டங்களில் வென்ற உங்களுக்கு இந்த தோல்வி சாதாரணமான ஒன்று. நாடே உங்களை பார்த்துக் கொண்டு இருக்கிறது, சிரியுங்கள் என்று ஆறுதல் கூறி இருக்கிறார்.
அப்போது அங்கு ஒரு பக்கம் தள்ளி நின்று கொண்டிருந்த முகமது ஷமியை அழைத்த பிரதமர் மோடி, அவரை கட்டியணைத்தார். பின்னர் ஷமி முதுகில் தட்டி சபாஷ் சொன்னபடி, சிறப்பாக விளையாடியதாக பாராட்டினார்.
பின்னர் அனைவரிடமும் விடைபெறும் முன்பு டெல்லி வரும் போது சந்திக்க இருப்பதாக கூறி சென்றார். இந்த வீடியோ இதன் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.