மு.க அழகிரி பாஜகவில்….? முக்கிய பிரமுகர் சொன்ன சீக்ரெட்
திருச்செங்கோடு: முக அழகிரி பாஜகவில் இணையும் நாளை உருவாக்குவோம் என்று கூறி அடுத்த பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சிபிஆர்.
மழைவிட்டும் தூவானம் விடாது என்பார்கள்.. அப்படித்தான் இப்போது சில விஷயங்கள் பற்றிய பரபரப்பு எழுந்திருக்கிறது. திமுகவில் முக அழகிரிக்கு இடமில்லை என்பது தெரிந்த சங்கதி. எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என்று அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் அட்டர்பிளாப்பாக இப்போது பலத்த அமைதியில் இருக்கிறார்.
ஆனால், விக்கிரமாதித்தனை விடாத வேதாளம் போல… அழகிரி விவகாரத்தை இப்போது கையில் எடுத்து பேச ஆரம்பித்து இருக்கிறது. அதாவது பாஜகவில் அழகிரி இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் பாஜகவின் சிபி ராதாகிருஷ்ணன்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மக்கள் ஆசீர்வாதம் என்ற யாத்திரையை தமிழக பாஜக தொடங்கி இருக்கிறது. கடந்த 16ம் தேதி இந்த யாத்திரை கோவையில் தொடங்கியது. அதனை தொடர்நது திருப்பூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் என்பது திட்டம்.
இந்த யாத்திரையின் ஒரு கட்டமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நிகழ்சசியில் கலந்து கொண்டனர்.
அப்போது சிபிஆர் பேசியதாவது: தமிழகத்தில் தாமரை மலரும் நாள் உருவாகத்தான் போகிறது. அந்த நாள் வருகிறது என்பதை தான் விபி துரைசாமி, ராமலிங்கள் ஆகியோர் வருகை தெரியபடுத்தி உள்ளது.
விரைவில் முக அழகிரியும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம். இப்போது 4 எம்எல்ஏக்களை பெற்றுள்ள நாம் நாளை 140 இடங்களை பெறும் நிலையை உருவாக்கி காட்டுவோம் என்று பேசினார்.
சிபி ராதாகிருஷ்ணனின் இந்த அழகிரி பேச்சை அக்கட்சியில் உள்ள முக்கியஸ்தர்களே ரசிக்கவில்லையாம்… உள்ளாட்சி தேர்தல் பற்றிய பரபரப்பு தொடங்கி உள்ள நிலையில் அதற்கான செயல்பாடுகள், திட்டங்கள் பற்றி வகுக்காமல் இன்னும் அழகிரி பல்லவியை பாடினால் எப்படி என்ற முணுமுணுப்புகளும் தொடங்கி உள்ளதாம்…!