முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக மருத்துவமனை போனார்….? என்ன காரணம்…?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஏன் மருத்துவமனைக்கு திடீரென சென்றார் என்பது பற்றிய புதிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் எப்போதும் பரபரப்பாக இயங்கி வருகிறார் ஸ்டாலின். தினமும் இடைவிடாத பணி, கட்சி நிர்வாகம், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலருடன் ஆலோசனைகள், ஆய்வு கூட்டங்கள் என நேரம் காலமின்றி உழைத்து வருகிறார்.
நினைத்தது போலவே கொரோனா தொற்று குறைப்பில் அதிதீவிரமாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் களத்தில் இறக்கிவிட்டு பரவலை குறைத்து நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இந் நிலையில் திடீர் பரபரப்பாக இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். சில மணி நேர பரிசோதனைக்கு பின்னர் அவர் வீடு திரும்பிவிட்டார்.
இது குறித்து போரூர் மருத்துவமனை செய்திகுறிப்பு ஒன்றும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. திடீரென அவர் மருத்துவமனைக்கு போனது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வழக்கமாக அவர் ஆண்டுக்கு ஒருமுறை லண்டன் சென்று வருவது உண்டு. மருத்துவ சிகிச்சைக்காக அவர் செல்வார். ஆனால் கொரோனா பரவல் எதிரொலியாக, இங்கிலாந்திலும் கடும் பாதிப்புகள் இருந்ததால் அவரது பயணம் முடிவாகவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் தான் முதல்வர் ஸ்டாலின் திடீரென மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பி இருக்கிறார். இது குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் சொன்ன சில விஷயங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அவர்கள் கூறி இருப்பதாவது:
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்று ஓயாமல் உழைத்தார். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாக்கு பதிவு முடிந்தவுடன் ரிசல்ட் வரும் முன்பாக மாலத்தீவு பயணம் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அதுவும் நடக்காததால் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுத்தார். அந்த சில நாட்கள் தான் அவர் ஓய்வு என்று எடுத்த நாட்கள். மக்கள் பணிக்காக எந்நேரமும் உழைத்து கொண்டே இருந்ததால் உடலுக்கு புத்துணர்ச்சி இல்லாமல் போய்விட்டது.
சோர்வு அதிகமாக… அதனால் தான் இன்று அதிகாலை போரூர் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பின்னர் சில மணிநேரங்களில் வீடு திரும்பினார் என்று கூறுகின்றனர்.