ஜெ. பாணியில் ஸ்டாலின்…! பக்கத்தில் செந்தில் பாலாஜி..! ஷாக்கில் அதிமுக
சென்னை: ஜெயலலிதா பாணியில்.. எதிரணி எம்எல்ஏக்களை அறிவாலய முகாமுக்கு அணிவகுத்து கொண்டு வரும் நடவடிக்கைகள் திமுகவில் வேகம் பெற்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
திமுக ஆட்சியில் அமர்ந்து 2 மாதங்கள் கடந்துவிட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்ட நிலையில் உள்ளாட்சி தேர்தலை நோக்கி திமுக நகர ஆரம்பித்து இருக்கிறது. அதற்காக வலுவான திட்டங்களுடன் திமுக களம் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலில் அபார வெற்றி என்று ஒரு மைய புள்ளியை நோக்கி நகர ஆரம்பித்துள்ள திமுக, அதற்கான பிளான்களை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்துள்ளனர் என்று அதன் பின்னரே ஒவ்வொரு முக்கிய அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்கள் திமுக நோக்கி நகர ஆரம்பித்து உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
இப்போது அதற்கும் மேலாக… ஜெ. பாணி பிளான் ஒன்றை திமுக தலைமை கையில் எடுத்து அதற்கான பொறுப்பை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதாவது திமுகவுக்கு எதிராக அதிமுக வேகம் எடுக்கவிடாது, அதற்கான நடவடிக்கைகள் அதிகம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு உள்ளதாம்.
அதில் சில திட்டங்களை திமுக லிஸ்டில் வைத்துள்ளதாம். ஒன்று ஊழல் வழக்குகள் மூலம் முன்னாள் அமைச்சர்கள், அவர்கள் ஆதரவு எம்எல்ஏக்களை கபளீகரம் செய்வது, மற்றொரு அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்று குழம்பி தவிக்கும் எம்எல்ஏக்களை கொத்திக் கொண்டு போய் அறிவாலயத்தில் சேர்ப்பது.
இதன் தொடக்கம் என்றோ ஆரம்பித்துவிட்டதாக அறிவாலய முக்கிய பிரமுகர்கள் காதை கடிக்கின்றனர். அதாவது ஜெயலலிதாவை எதிர்த்த தேமுதிகவின் தற்போதையை நிலைமையை போன்று, அதிமுகவில் இருந்த ஒரு பிரிவு எம்எல்ஏக்களை நகர்த்தி கொண்டு திமுகவிடம் கரை சேர்ப்பதுதான் முக்கிய திட்டம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
முதலில் இந்த பிளானுக்கு திமுக முக்கிய சீனியர்கள் ஒத்துக் கொள்ள வில்லை என்றும், ஆனால் பாஜகவின் தீவிர திமுக எதிர்ப்பு, அதிமுகவின் சமீபத்திய நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஓகே சொல்லிவிட்டார்களாம்.
ஆகையால் விரைவில் அதாவது.. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து முக்கிய எம்எல்ஏக்கள் பலர் திமுக நோக்கி அணிவகுக்க உள்ளதாக தகவல்கள் பரபரக்க வைத்திருக்கின்றன. திமுகவின் மூவ்மெண்ட்டுகளை உன்ளிப்பாக கவனித்து வரும் அதிமுக அவ்வளவு எளிதில் பிடிகளை விட்டுவிடாது என்றும் பதிலடி கட்டாயம் இருக்கும் என்றும் கூறி நம்பிக்கையூட்டுகின்றனர்…
ஆக மொத்தம் உள்ளாட்சி தேர்தலுக்குள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு என்று தாவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கண் சிமிட்டுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்..!