Sunday, May 04 01:07 pm

Breaking News

Trending News :

no image

கனியாமூர் கலவரம்…! ரூ.1 கோடி பேரம்…? வெளியான ‘திடுக்’ தகவல்


சென்னை: கனியாமூர் கலவரம் தொடர்பாக, பள்ளி நிர்வாகத்திடம் மாணவியின் குடும்பத்தினர் பேரை கூறி சிலர் ரூ.1 கோடி நிவாரணம் கேட்ட விவரம் பற்றிய தகவல் போலீஸ் விசாரணையில் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாத படி உள்ளது கனியாமூர் கலவரம். 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் மரணம், அதை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள், கலவரம், தீ வைப்பு ஆகியவை தமிழகத்தின் தலைப்பு செய்திகளாகி உள்ளன.

மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூக்குரலுடன் எழுந்த பெரும் கும்பல் பள்ளியையே சூறையாடியது. கலவரத்தை நடத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை தரப்பில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் வேகம் எடுக்கப்பட்டு உள்ளன.

தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைகளின் போது அங்கு திரண்டவர்கள் யார்? செல்போன் லொகேஷன்கள், தொலைக்காட்சிகளில் வெளியாக வீடியோக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பலரையும் போலீசார் கொத்து, கொத்தாக சென்று அள்ளி வழக்குபதிவு செய்து உள்ளே தள்ளி வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையில் சைபர் க்ரைம் போலீசாரின் பணி அசாத்தியமான ஒன்றாக இருந்தாலும், நடவடிக்கைகள் வேகம் எடுத்து வருகின்றன. கைது நடவடிக்கையில் சிக்கியவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் ஓரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

எமோஷனல் காரணமாகவே பலரும் பள்ளியில் நுழைந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக கைதானவர்கள் கூறி வருவதாக போலீசார் கூறி உள்ளனர். விசாரணையில் கைதானவர்கள் தங்களின் செல்போனில் பரிமாறிக் கொண்ட தகவல்கள், வீடியோக்கள், உரையாடல்களை வைத்தும் கைது நடவடிக்கை வேகப்படுத்தப்பட்டு வருகிறது.

கலவர இடத்தில் தென்பட்ட ஒருவரையும் விடக்கூடாது என்பதில் காவல்துறையினர் மிக உறுதியாக உள்ளதாக தெரிகிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளி மீதான விசாரணை குறித்த விவரங்களும் கசிந்து வருகின்றன.

பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள தருணத்தில், மாணவியின் மரணத்துக்கு நிவாரணம் என்று அவர்களின் குடும்பத்தினர் சார்பாக சிலர் பள்ளி நிர்வாகத்தை அணுகியதையும் போலீசார் கண்டுபிடித்து உள்ளனராம். அவர்கள் பேரம் கேட்ட தொகையை கண்டு போலீஸ் தரப்பே அதிர்ந்து போயிருக்கிறதாம்.

கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பேரம் கேட்டு மாணவி குடும்பத்தினர் சார்பாக என்று சிலர் பள்ளி நிர்வாகத்தை அணுகி உள்ளார்களாம். ஆனால் பள்ளி நிர்வாகம் அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாகவும், அது பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறையில் இருந்து தகவல்கள் கசிந்திருக்கின்றன. இனி அடுத்து வரக்கூடிய புலன் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் அதிர வைக்கின்றன.

Most Popular