முதல்வர் ஸ்டாலின் சாதியை பேசிய பெண்…! தமிழ் தொலைக்காட்சி நேரலையில் ஷாக்
சென்னை: பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியில் பெண் ஒருவர் முதல்வர் ஸ்டாலின் சாதியை குறிப்பிட்டு பேசிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
தமிழகத்தில் கோவில்களில் அர்ச்சகர்கள், ஓதுவார்கள், பூசாரிகள் ஆகியோரை பணி நியமனம் செய்வது தொடர்பாக 2020ம் ஆண்டு அறநிலையைத்துறை புதிய விதிகளை கொண்டு வந்தது. கோவில்களில் அர்ச்சகராக பணி நியமிக்கப்படுவர் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும், 10ம் வகுப்பு முடித்து ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்தவர்கள் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த குறிப்பிட்ட விதிகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன.வழக்கின் தீர்ப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அறநிலைய துறை விதிகள் செல்லும்.
அதே நேரத்தில், ஆகம விதிகளை பின்பற்றி கட்டப்பட்டு உள்ள கோவில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். அர்ச்சகர்கள், பூசாரிகளை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலர்கள், தக்கார்கள் ஆகியோருக்கு மட்டுமே உள்ளது, அறநிலையத்துறைக்கு கிடையாது என்று கூறியது என பல விஷயங்களை கோர்ட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
ஐகோர்ட் தீர்ப்பு குறித்து பல்வேறு கருத்துகள், வாதங்கள் பொது வெளியில் முன்வைக்கப்பட்டன. சில செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டன. பிரபல முன்னணி செய்தி தொலைக்காட்சியில் அப்படி ஒரு விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசப்பட்ட சில விஷயங்கள் தான் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் இரவு நடத்தப்படும் இந்த விவாத நிகழ்ச்சியில் அனைத்து சாதியினரும் அர்ச்ககர் தீர்ப்பு… தீர்வா? சிக்கலா? என்ற தலைப்பில் விவாதம் அரங்கேறியது.
நிகழ்ச்சியில் நெறியாளருடன் 3 விருந்தினர்கள் பங்கேற்றனர். திமுக சார்பில் ராஜீவ்காந்தி, வலதுசாரி நித்தியானந்தம், ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜா ஆகியோர் பங்கேற்றனர். தொடக்கம் முதல் விவாதம் வழக்கம் போல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.
நிகழ்ச்சியில் அந்தணர் என்பவர் யார் என்ற பொருளில் காரசாரமாக விருந்தினர்கள் பேசினர். அப்போது ஆன்மீக சொற்பொழிவாளர் சிந்துஜா பேச நெறியாளர் வாய்ப்பளித்தார். அவர் பேசியதாவது:
அவர் கூறியதாவது: அனைத்து சாதியினராகலாம் என்று தீர்ப்பு வந்துவிட்டது. இவர் (ராஜீவ்காந்தியை குறிப்பிடுகிறார்) பேசுவது எல்லாம் நீதிமன்ற அவமதிப்பு போன்று இருக்கிறது. 2 ஆயிரம் ஆண்டு போராட்டம் என்று கத்துகிறார். நான் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்.
சாதிக்கும் இதற்குமே சம்பந்தம் இல்லை. இந்த விதிப்படி… இந்த முறைப்படி படித்தவர்கள், இந்த நூல்களில் இருக்கக்கூடியவர்கள் என்று பேசுகிறோம். ராஜீவ்காந்தி குறுக்கே பேச வேண்டாம், நான் பேசிய பின்னர் பேசட்டும்.
நான் எப்படி இதை interperate பண்ணலாம் என்றால்… எப்படி திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி என்பது போல இசை வேளாளர்கள் மட்டும் தான் தலைவராக முடியும் என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கு என்று சிந்துஜா பேசினார்.
அப்போது உடனடியாக சீறிய ராஜீவ்காந்தி, அபத்தமான statement.. இது நரிப்புத்தி…. நரிப்புத்தி அப்படித்தான் இருக்கும் என்று கூறுகிறார். பொது வெளியில் ஒருவர் சாதியை பத்தி சொல்றாங்க என்று பேச,பேச…. நெறியாளர் பொசுக்கென்று குறுக்கிட்டு முடிக்கட்டும், முடிக்கட்டும், இதில் பதற்றம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை என்று கூறுகிறார். சாதியை குறிப்பிட்டே மீண்டும் விவாதம் தொடர்ந்தது.
நிகழ்ச்சியில் பேசிய இந்த பகுதி இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. பொது நிகழ்ச்சியில் ஒரு மாநில முதல்வரின் சாதியை குறிப்பிட்டு எப்படி பேசலாம் என்கிற ரீதியில் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.
முதல்வரின் சாதியை குறிப்பிட்டு நேரலையில் விவாதிக்கப்படுவதை நெறியாளர் எப்படி அனுமதிக்கிறார்? ஏன் இதை அனுமதித்தார்? என்று எதிர்மறை விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
வலதுசாரி சார்பாக 2 பேரை எப்போதும் ஊடகங்களில் விவாதத்துக்கு அழைக்கிறார்கள், விவாதம் ஒரு சார்பாகவே இருக்கிறது என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு உள்ளன. மேலும் திமுகவுக்கு எதிராகவும், வலதுசாரிக்கு ஆதரவாகவும் டுவிட்டரில் பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.