உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் அதிரடி…! 8 மாஜிக்களுக்கு ரெடியாகும் நெருக்கடி
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் வேகம் எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள், புகார்கள் பற்றி விசாரிக்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் தெரிவித்தார். அதற்காக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி என்கிற ஐபிஎஸ் அதிகாரி கொண்டு வரப்பட்டார்.
ஆனால், அரியணையில் அமர்ந்த பின்னர் கொரோனா பணிகளில் திமுக அரசு முழு கவனம் செலுத்தியது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டபடியால் மற்ற நடவடிக்கைகளை திமுக முன் எடுக்க ஆரம்பித்து உள்ளது.
அதன் முக்கிய கட்டமாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு முக்கிய கட்டத்தை எட்டி இருக்கிறது. வரும் 5ம் தேதி அதன் மீதான இறுதிக்கட்ட விசாரணை நடக்க உள்ளது.
இதற்கிடையே ஒரு முக்கிய தகவல் ஆளும் தரப்பில் இருந்து கசியவிடப்பட்டு உள்ளது. அதாவது, 8 முன்னாள் அமைச்சர்கள் மீதான பிடி இறுகும் என்று கூறப்படுகிறது. எஸ்பி வேலுமணி, தங்கமணி, ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் அந்த பட்டியலில் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் பற்றிய முக்கிய ஆதாரங்கள், ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். ஆகையால் விசாரணைகள் வேகம் எடுக்கும் என்று தெரிகிறது.
அனேகமாக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு நடவடிக்கையாக ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. எந்த தருணத்திலும் வழக்கு தொடர்பான ஆதாரங்கள் வலுவில்லாமல் இருந்துவிடக்கூடாது என்பதில் அரசும், அதிகாரிகளும் உன்னிப்பாக உள்ளதாகவும் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளன. திமுக அரசின் இந்த நடவடிக்கை அப்படியே அந்த 8 முன்னாள் அமைச்சர்களுக்கும் எப்படியோ சென்று உள்ளதாகவும், என்ன செய்யலாம் என்று அவர்களும் ஆலோசித்து வருவதாகவும் கூடுதல் தகவல்கள் உலா வருகின்றன.