எம்பி பதவி திடீர் ‘ராஜினாமா’ …! அதிமுக சீனியர்ஸ் தடாலடி…!
சென்னை: கேபி முனுசாமியும், ஒரத்தநாடு வைத்திலிங்கமும் அதிமுக எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் எம்பியாக இருக்கும் கேபி முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும், ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இரண்டு பதவிகளில் இருந்தால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதால் எம்பி பதவியை இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
கேபி முனுசாமியும், வைத்திலிங்கமும் எம்எல்ஏக்களாகவே நீடிப்பார். இருவரும் எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் அவர்களின் எம்பிக்களின் இடங்கள் காலியாகின்றன.ஏற்கனவே முகமது ஜான் காலமானதால் அந்த எம்பி பதவி காலியாக உள்ளது.
இப்போது மேலும் 2 பேர் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் மொத்தம் 3 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ளன. இந்த 2 எம்பி பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் முகமது ஜானுக்கு தனியாகவும், முனுசாமி, வைத்திலிங்ம் இடங்களுக்கு தனியாகவும் நடக்கலாம்.
ஒருவேளை முகமது ஜானுக்கான இடத்துக்கு மட்டும் தேர்தல் நடந்தால் ஒரு எம்பி பதவி அதிமுகவுக்கு கிடைக்கும். மாறாக 3 எம்பிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும் பட்சத்தில் திமுகவுக்கு 2 எம்பிக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஆக மொத்தத்தில் எம்பி பதவிகளை முனுசாமியும், வைத்திலிங்கமும் ராஜினாமா செய்துள்ளதால் அதிமுகவுக்கே சிக்கலான கட்டமாகத்தான் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.