பஞ்சாயத்தா…? மோடிக்காக காத்திருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்.. தவிப்பில் ர.ர.க்கள்
சென்னை: சென்னையில் பிரதமர் மோடியை ஓபிஎஸ்சும், ஈபிஎஸ்சும் சந்திக்க உள்ளனரா என்று அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் ஏக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
நாடே பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடர் தொடங்குகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் போட்டியை பிரதமர் மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.
அரசு விழா என்றாலும் அதையும் தாண்டி அரசியல் அதிமுகவினால் இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதிமுகவில் இரு நேரெதிர் துருவங்களாக மாறி போயிருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் எப்படியாவது பிரதமரை சந்தித்துவிட வேண்டும் என்று முயற்சித்து வருகின்றனராம்.
ஆனால், அவ்வளவு எளிதல்ல என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், ஆகியோருடன் இணைந்து விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். விழா முடிந்து ஆளுநர் மாளிகையில் இன்றிரவு தங்குகிறார்.
இரவு 7.30க்கு பிறகே இத்தகைய சந்திப்பு நடக்கும் என்றும், இல்லை நடக்காது என்றும் இருவேறு தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் உலாவி கொண்டிருக்கின்றன.
பாஜகவின் தற்போதைய இலக்கு என்பது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி உள்ளதால் அதிமுக பிளவுப்பட்டு இருப்பதை நிச்சயம் விரும்பாது. ஆகவே சந்திப்பு கன்பார்ம் என்று ஒரு தரப்பு சொல்லி வருகிறது.
அதே நேரம், எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் ஈபிஎஸ் பிரதமர் மோடியை பார்க்க வாய்ப்பு கிடைக்கலாம்.. ஆனால் ஓபிஎஸ்சுக்கு இதுபோன்று அமையுமா என்று தெரியாது. எனவே ஒருத்தரைவிட்டு ஒருத்தருடன் சந்திப்பு என்பது இருக்காது என்றும் ஒரு தகவல் ஆரூடமாக உலாவி கொண்டிருக்கிறது.
இரு துருவங்களும் ஒன்றாக இணைந்து பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று டெல்லி தலைமை விரும்புவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படி நடக்கவே நடக்காது என்று அதிமுகவின் தற்போதைய நிலையை சுட்டிக்காட்டும் ரத்தத்தின் ரத்தங்கள் அடுத்து என்ன என்பது உறுதியாக தெரியவில்லை என்று புலம்பி தள்ளி வருகின்றனர்.