Sunday, May 04 12:08 pm

Breaking News

Trending News :

no image

பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் இருக்கா..-? ஈபிஎஸ் தரப்பை அதிர வைத்த ஐகோர்ட்


சென்னை: அதிமுக தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளதா? ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இருக்கின்றனவா? என்று ஈபிஎஸ் தரப்புக்கு சென்னை ஐகோர்ட் கேள்விகள் கேட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவை வரும் 11ம் தேதி கூட்டியுள்ளா எடப்பாடி பழனிசாமி. இதை எதிர்த்து ஓபிஎஸ் தொடுத்துள்ள வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற வாதங்கள் தான் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.

பிற்பகல் சரியாக 2.15 மணிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணை தொடங்கியது. அப்போது ஓபிஎஸ் தரப்பு பின்வருமாறு வாதிட்டது:

வரும் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழு அழைப்புக்கான நோட்டீஸ் செல்லத்தக்கதா என்பது தான் வழக்கின் சாராம்சம். வழக்கு தாக்கல் செய்யும் ஒருநாள் முன்னரே நோட்டீஸ் கிடைத்தது. பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கூட்ட முடியும்.

கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் என்ற அமைப்பு கிடையாது. நோட்டீசில் யார் கையெழுத்தும் இல்லை என்று வாதிட்டது. ஆனால் ஒரே போடாக ஈபிஎஸ் தரப்பு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியது.

அனைத்தையும் கேட்ட நீதிபதி எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாக உள்ளதா? பொதுக்குழு நோட்டீசில் கையொப்பம் இடுவது யார்?

தலைமை கழக நிர்வாகிகளுக்கு கட்சி பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தரப்பட்டு உள்ளதா? என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன் வைத்தது. இவை அனைத்துக்கும் பதிலை தாக்கல் செய்யுமாறு கூறி நாளை பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Most Popular