தமிழக சட்டசபைக்கு தேர்தல் எப்போது…? இதோ முழு விவரம்…!
டெல்லி: தமிழகத்துக்கு வரும் தேதி சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவகிறது. அதன் காரணமாக தேர்தல் நடத்தும் ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கி உள்ளது.
5 மாநில தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் அடங்கிய தேர்தல் குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது. பின்னர் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும், அசாம், மேற்குவங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதிகளை அறிவித்தார். அதன்படி தமிழகத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனுக்களை மார்ச் 10ம் தேதி முதல் தாக்கல் செய்யலாம் என்றும், மனு தாக்கல் முடிவு மார்ச் 19ம் தேதி என்றும், மனுக்கள் மார்ச் 20ம் தேதி பரிசீலனை செய்யப்படும் என்றும் வாபஸ் பெறும் தேதி மார்ச் 22ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்து, தேர்தல் முடிவு மே 2ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.