என்றும் முதல்வர் எடப்பாடியார்…! ஓபிஎஸ்சை வெறுப்பேற்றும் புது முழக்கம்…!
கோவில்பட்டி: எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று அமைச்சர் கருப்பண்ணன் கூறி, அதிமுகவில் அடுத்த விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலே நடக்கவில்லை. அதற்குள் நான் தான் முதலமைச்சர், நீங்க தான் முதலமைச்சர் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டது. ஓபிஎஸ் கோபம் அறிந்த அமைச்சர்கள், முதலமைச்சர் இபிஎஸ் மனநிலையை எடுத்துச் செல்ல, ஒரு டுவிட்டர் போட்டு இந்த விவகாரத்தை ஆப் செய்துவிட்டார் ஓபிஎஸ்.
இப்போது தேர்தல் பணிகள் தான், மகத்தான வெற்றி பெறுவதே நோக்கம் என்று அவர் கூறிவிட்டு அமைதியானாலும் முதலமைச்சர் யார் என்ற விவகாரம் இன்னமும் அக்கட்சியில் புகைந்து கொண்டே இருக்கிறது. இப்போது லேட்டஸ்டாக புகைய வைத்திருப்பவர் அமைச்சர் கருப்பண்ணன்.
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று அமைச்சர் கருப்பண்ணன் கூற, அதிமுகவில் இப்போது அடுத்தக்கட்ட மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது என்று சொல்லலாம். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய கருப்பண்ணன், சுற்றுச்சூழல் திருத்த சட்டம் குறித்து முதலமைச்சர் அமைத்த குழு அளிக்கும் அறிக்கை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். வரும் சட்டசபை தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியே பதவியேற்பார் என்றும் கூறினார். அவரின் இந்த பேட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்களை கடுப்பேற்றி உள்ளது. ஆக மொத்தம்… மழை விட்டும் இன்னும் தூவானம் விடவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.