ராத்திரியில் வந்த ட்ரிங்… ட்ரிங்…! ஆதரவாளர்களுக்கு வேலுமணியின் அதிரடி ஆர்டர்
சென்னை: விடிந்தால் ரெய்டு என்ற செய்தி.. நேற்று இரவே முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி காதுகளுக்கு போய்விட்டது என்ற பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டுக்கு இன்று இலக்கானது. கிட்டத்தட்ட 60 இடங்களில் ஒரு மாஸ் ரெய்டை நடத்தி முடித்துவிட்டு கிளம்பி இருக்கிறார்கள் அதிகாரிகள்.
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டு வரும் என்று நேற்றைய தினமே எஸ்பி வேலுமணி மோப்பம் பிடித்துவிட்டார் என்று அதிமுகவின் சீனியர்களே இப்போது பேச தொடங்கிவிட்டனர்.
அதன் காரணமாக நேற்று இரவு முதல் விடிய, விடிய பல உத்தரவுகளை தமது ஆதரவாளர்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் வேலுமணி போட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள சில முக்கிய தகவல்கள் விவரம் வருமாறு:
வரும் 13ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் இருக்கிறது. கட்சியின் கொறடாவான எஸ்பி வேலுமணி சென்னையில் உள்ள தமது சகோதரர் அன்பரசன் சொகுசு வீட்டில் இருந்துள்ளார். ராத்திரி நேரம் ஒரு போன்கால் அவருக்கு பறந்திருக்கிறது.
போனில் சொல்லப்பட்ட விஷயத்தை கேட்டு ஒரு கணம் அவர் மிரண்டுவிட்டார். அதாவது 50 இடங்களில் ரெய்டு கன்பார்ம் என்பதும், எப்ஐஆர் போடப்பட்டு விட்டது என்பதும் தான் அந்த போனில் சொல்லப்பட்ட தகவல். ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்த வேலுமணி, பின்னர் ஒரு முடிவுடன் சில காரியங்களை செய்தாராம்.
உடனடியாக, கோவை, சென்னையில் உள்ள தமது ஆதரவாளர்களுக்கு சில அதிரடியான உத்தரவுகள் பறந்தனவாம். கோவையில் உள்ள தமது வீட்டில் ரெய்டு நடந்தால்… எங்கு ரெய்டு நடக்கிறதோ அங்கு கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினராவது அங்கு குழும வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
தமக்கு ஆதரவாளர்கள் அதிகளவு கூடினால் தான் இமேஜ் என்பதை மனதில் வைத்து இப்படி அவர் உத்தரவிட்டாராம். அனைத்து உத்தரவுகளும் சடுதியில் நடந்து முடிய அதன் பின்னர் சென்னையில் உள்ள எம்எல்ஏ ஹாஸ்டலில் தமது அறைக்கு வந்தாராம்.
தமிழக அரசின் இந்த ரெய்டு நடவடிக்கையை அரசியல் ரீதியாக மாற்ற முன்னரே முடிவெடுத்து தான் இப்படிப்பட்ட உத்தரவுகளை அவர் பிறப்பித்தார் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கும் மேலாக படு, பக்காவாக அனைத்து ஆவணங்கள், ஆதாரங்களை ஆகியவற்றை க்ராஸ் வெரிபை பண்ணி ரெடியாக வைத்திருந்தனராம். அதன் பின்னர் தான் 9ம் தேதி(அதாவது நேற்றைய தினம்) எப்ஐஆர் பதியப்பட்டது என்கின்றனர்.
இனி அடுத்து வரக்கூடிய நாட்கள் கடினமானதாக தான் இருக்குமோ என்ற சந்தேகம் இன்றைய ரெய்டின் முடிவில் எழுந்துள்ளதாக அதிமுக முகாமில் இருந்து தகவல்கள் கூறுகின்றன.