மீண்டும் ஊரடங்கா..? தமிழக அரசு சொன்ன முக்கிய மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது வதந்தி என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னமும் ஓயவில்லை. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் தொற்றுகளின் எண்ணிக்கை குறையவில்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, சேலம், திருப்பூர் என பல மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந் நிலையில் இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும், அதை நம்ப வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு நடத்திய போது செய்தியாளர்களை சந்தித்த அவர், முகக்கவசம் அணியவேண்டும் என்ற அரசின் விதியை பின்பற்றாததால் ஒன்றரை கோடி ரூபாய் இதுவரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்றுகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கூறிய அவர், முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவித்தார்.