காங்கிரசுக்கு டாட்டா…! தாமரையை கையில் எடுத்த குஷ்பு…!
டெல்லி: காங்கிரசில் இருந்து விலகி தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் நடிகை குஷ்பு பாஜகவில் இன்று இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணி பற்றிய பேச்சுகள், தனிச்சின்னம், வேட்பாளர்கள் தேர்வு என்று ஒவ்வொரு கட்சியும் அரசியல் நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய பிரமுகர்கள் எதிர் முகாமுக்கு தாவுவதும் நடந்து வருகிறது.
அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைய உள்ளார் குஷ்பு என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். காங்கிரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு எதிரொலியாக அவர் இன்று தம்மை பாஜகவில் இணைத்துக் கொள்ள உள்ளார் என்று டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
புதிய கல்விக்கொள்கையை அவர் ஆதரித்த அந்த கணத்தில் இருந்தே காங்கிரசுக்கும், குஷ்புவுக்கும் முட்டல் மோதல் கணக்கு ஆரம்பித்துவிட்டது. தாம் கேட்ட வலுவான மாநில பதவி தராததால் அதிருப்தியில் இருந்த குஷ்பு அப்போதே பாஜகவின் கதவை தட்ட ஆரம்பித்துவிட்டார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதன் தொடக்கப்புள்ளி தான் புதிய கல்விக்கொள்கைக்கு அவர் ஆதரவு தெரிவித்தது. அதிகாரமுள்ள கட்சியில் பதவி வேண்டும் என்று குஷ்பு விரும்பியதே காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரசில் வலிமையான பதவி கேட்டு அவர் கொடி பிடிக்க… ஒரு கட்டத்தில் கட்சி மேலிடம் நோ சொல்லிவிட்டதாம்.
அதனால் பாஜகவுக்கு தாவும் முடிவை எடுத்து, அதற்கான ரூட்டையும் பிடித்து டெல்லி தலைமையிடம் ஓகே வாங்கிவிட்டாராம் குஷ்பு. நேற்றிரவு சென்னையில் இருந்த டெல்லி சென்றுள்ள அவர் ஜேபி நட்டா தலைமையில் இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவில் நீங்கள் இணைகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது குஷ்பு, நோ கமெண்ட்ஸ் என்று பதிலளித்து உள்ளார். இதுவே அவர் பாஜக பக்கம் செல்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஒரு வேளை அவர் பாஜகவில் இணைந்தால் எந்த பதவியை வழங்குவது என்று பாஜக மேலிடம் குழம்பி போயுள்ளது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.