என்னது..? 'திமிங்கல வாந்தி' ரூ. 30 கோடியா..? போலீஸ் போட்ட ஸ்கெட்ச்
திருச்சூர்: கேரளாவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கலத்தின் வாந்தியை வனத்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர்.
திருச்சூர் அருகில் உள்ள சேட்டுவாவில் இருந்து இந்த திமிங்கல வாந்தியை கைப்பற்றி உள்ளனர். திமிங்கல வாந்திக்கு ஆங்கிலத்தில் அம்பெர்கிரிஸ் (ambergris) என்று பெயர். சர்வதேச சந்தையில் வாசன திரவியங்கள் தயாரிக்க இந்த பொருள் முக்கியமாக பயன்படுத்திகிறது. ஆகையால் திமிங்கல வாந்திக்கு இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் எக்கச்செக்க டிமாண்ட்.
இது குறித்து கேரள வனத்துறையினர் கூறி இருப்பதாவது: கேரளாவில் அம்பெர்கிரிஸ் சிக்குவது இதுவே முதல் முறை. 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் ரபீக், பைசல், ஹம்சா. இவர்களில் ரபீக், பைசல் இருவரும் திருச்சூரை சேர்ந்தவர்கள். ஹம்சாவின் ஊர் எர்ணாகுளம்.
பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல வாந்தியின் எடை 19 கிலோ. சர்வதேச மதிப்பு 30 கோடி ரூபாய். அம்பெர்கிரிஸ் வேண்டும் என்பது போல கடத்தல்காரர்களை அணுகி அவர்களை பிடித்தோம். வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி திமிங்கலங்களை கொல்வது, வேட்டையாடுவது கொல்வது குற்றம்.
பிடிபட்ட 3 பேரும் தங்களுக்கு எப்படி அம்பெர்கிரிஸ் கிடைத்தது என்று சொல்லவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.