ரேஷன் கார்டுக்கு மத்திய அரசு வைத்த ‘செக்’….! பயனாளிகளே தெரியுமா..?
டெல்லி: கிட்டத்தட்ட 4.74 கோடி ரேஷன் கார்டுகளை ரத்து செய்துள்ள மத்திய அரசு 70 லட்சம் கார்டுகளை கண்காணித்து வரும் தகவல் வெளியாகி உள்ளது.
ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் நியாயவிலைக்கடை மூலம் அரிசி வழங்குவது. இந்த சலுகையை பெற வேண்டுமானால் ரேஷன் கார்டுகள் வைத்திருப்பது கட்டாயம்.
ஆனால் ரேஷன் கார்டுகளை தவறாக பயன்படுத்தி கள்ளச்சந்தையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களை பலரும் விற்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. தகுதியற்றவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளால் தகுதியானவர்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் செக் வைக்கும் பொருட்டு தகுதியில்லாதவர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயாரித்து அவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் மத்திய அரசு வெளியிட்டு உள்ள ஒரு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதாவது, 2021ம் ஆண்டு வரையில் மொத்தம் 4.74 கோடி தகுதியற்ற ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளன. இன்னமும் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் அரசின் கண்காணிப்பில் உள்ளன.
அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருவதாகவும், விரைவில் தகுதியற்றவர்களாக இருந்தால் அந்த கார்டுகள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் நடவடிக்கையை அறிந்த தகுதியற்ற பலரும் தங்களது ரேஷன் கார்டுகளை திருப்பி அளிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.