ஒத்த வார்த்தையால் சிக்கிய எடப்பாடி…! ‘பூமராங்’ ஆக திரும்பும் கட்சி முக்கிய பிரமுகர்கள்
சென்னை: அதிமுக தோல்வி என்ற வார்த்தையை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமிக்கு சொந்த கட்சியின் முக்கிய பிரமுகர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எப்படியாவது அதிமுகவை தமது கைக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்பது சசிகலாவின் எண்ணம். அதற்காக ஒரு பக்கம் ஆடியோ அரசியல், மதுசூதனின் உடல்நலம் விசாரிப்பு சசிகலாவின் அதிரடிகள் அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சட்டசபை தேர்தல் தோல்வி, அதிமுக தலைமை குறித்த கேள்விகள் என தொண்டர்கள் ஒரு பக்கம் சோர்ந்து போயுள்ளனர். கட்சி தலைமை வலுவாக இருக்க வேண்டும் என்று அடிமட்ட தொண்டர்கள் நினத்திருந்தாலும் களத்தில் நடப்பது வேறாக தான் உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அதிமுக மீண்டும் வெற்றி பாதைக்கு பயணிக்க வேண்டும் என்று அனைத்து சந்தர்ப்பங்களிலும் சசிகலா பேசி வருகிறார். ஆனால் இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு சசிகலா எத்தனை பொய்கள் வேண்டுமானாலும் சொல்லட்டும், அதிமுகவை சாய்க்க முடியாது, அவர் அதிமுகவில் இருந்த காலத்திலும் அதிமுக தேர்தலில் தோற்றிருக்கிறது, மறக்க வேண்டாம் என்று விமர்சனம் செய்துள்ளார்.
எடப்பாடியின் இந்த பேச்சுக்கு தான் கட்சியின் முக்கிய பிரமுகர்களே அதிருப்தி தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. சசிகலா கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று பேசி வருகிறார், அதற்கு பதிலடி கொடுப்பதை விட்டுவிட்டு, சசிகலா இருந்த சமயத்தில் ஜெயலலிதாவும் இருந்தார், அதிமுக தோற்றுவிட்டது என்றால் அது ஜெயலலிதாவின் தேர்தல் வியூகங்களை பற்றி கேள்வி எழுப்புவதாக தானே அமையும் என்றும் விமர்சித்து இருக்கின்றனர்.
சசிகலாவை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் ஆளுமையை பரிகாசித்து இருக்கிறார் என்றும் கடும் விமர்சனங்களை அதிமுக சீனியர்கள் வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் பரவி இருக்கின்றன.
அதிமுக தோல்வி என்று பேசியிருப்பது ஜெயலலிதாவின் அரசியல் ஆளுமையை சிறுமைப்படுத்துவதாக உள்ளது என்றும் அவர்கள் கோபமுகம் காட்டி இருப்பதாகவும் அதிமுக தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இந்த விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்ள போகிறார் என்பது அடுத்து வரக்கூடிய காலக்கட்டங்களில் தெரிய வரும்..!