12 சதவீதம் கமிஷன்… ரூ.1500 கோடி கரெப்ஷன்… சிக்குவாரா எஸ்பி வேலுமணி..?
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 1500 கோடி ரூபாய் முறைகேடு செய்துவிட்டார் என்று ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்பவர் கோவை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது வலுவான அமைச்சராக வலம் வந்தவர் எஸ்பி வேலுமணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் எஸ்பி வேலுமணி பற்றியும் ஆதாரத்துடன் ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் வழங்கி இருந்தார்.
திமுக ஆட்சி அமைந்தால் எஸ்பி வேலுமணி மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை வாங்கி தருவதாகவும் கூறியிருந்தார். கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் முறைகேட்டு புகார்களை திமுக அரசு தூசு தட்ட ஆரம்பித்து உள்ளது.
அதன் ஆரம்ப புள்ளி தான் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் ரெய்டு, ஆவணங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள். இப்போது அதன் தொடர்ச்சியாக எஸ்பி வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை திமுக கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
இது ஒரு பக்கம் இருக்க….. எஸ்பி வேலுமணியிடம் திரைப்பட தயாரிப்பாளர் ரேஸ்கோர்ஸ் ரகுநாதன் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் ஊழல் புகாரை தட்டி விட்டு இருக்கிறார். இத்தனைக்கு இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி என்பதுதான் கூடுதல் விசேஷம்.
அவர் தமது புகார் மனுவில் குறிப்பிட்டு உள்ள விவரங்கள் வருமாறு: பில்லூர் 3வது குடிநீர் திட்டம், அத்திகடவு - அவினாசி, நொய்யல் புனரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி, சாலை பணிகள் உள்ளிட்ட பல திட்டங்களில் ஏக ஊழல் நடந்திருக்கிறது.
கோவை மாநகராட்சியில் எந்த திட்ட பணிகள் என்றாலும் 12 சதவீதம் கமிஷன் பெற்று இருக்கிறார். எனவே முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளளார்.
புகார் கொடுத்துவிட்ட ரேஸ்கோர்ஸ் ரகுநாதன், கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் கமிஷனாக கோவை மாநகராட்சி திட்டங்களில் அவர் பெற்றுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார். அவரின் இந்த புகார்+குற்றச்சாட்டு குறித்து அறிந்த அதிமுக மேலிடம் திகில் அடைந்து போயிருக்கிறதாம்…!