காலமானார் கருப்பன் குசும்புக்காரன்…! மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்தது
மதுரை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்.
சினிமாவில் 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நகைச்சுவை நடிகர் சூரிக்கு தந்தையாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது.
பாரதிராஜாவின், 'கிழக்குச் சீமையிலே' படத்திலிருந்து தமது திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாம் மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாக, உதவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று திரைத்துறையினர் பலரும் அவருக்கு உதவிகளைச் செய்தனர். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நடிகர் தவசி காலமானார்.