காலையில் டிஸ்கஷன்… மாலையில் ஆக்ஷன்…! முதல்வர் ஸ்டாலின் ரியாக்ஷன்
சென்னை: சென்னையில் காலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த, மாலையில் கள்ளக்குறிச்சி கலெக்டர், எஸ்பி அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதை தொடர்ந்து நடந்த போராட்டம் வன்முறை, கலவரமாக மாற, பள்ளி சூறையாடப்பட்டது.
பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்திய இந்த நிகழ்வு குறித்து சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் எவ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து முடிந்த நிலையில், சிறிது நேரத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்று தமிழக அரசிடம் இருந்து வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதில் மாவட்ட எஸ்பி செல்வக்குமார் வெயிட்டிங் லிஸ்டில் வைக்கப்பட்டு உள்ளார். புது எஸ்பியாக திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையாளர் பகலவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.