மேடையில் கண்ணீர் விட்ட அமைச்சர் எல். முருகன்…! என்னாச்சு..?
கோவை: கோவையில் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் எல். முருகன் திடீரென தம்மை கட்டுப்படுத்தமுடியாமல் கண்ணீர்விட்டு கலங்கிய படி பேசியது தொண்டர்களை உருக வைத்துள்ளது.
பாஜக சார்பில் கோவையில் மக்கள் ஆசீர்வாதம் என்ற யாத்திரை இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய இணையமைச்சர் எல் முருகன் விமானம் மூலம் கோவை வந்தார்.
அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காமராஜபுரம் பகுதியில் மக்கள் ஆசீர்வாதம் கூட்டத்தை முன்னிட்டு கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, சிபி ராதாகிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் எல் முருகன் பேசியதாவது:
காங்கிரஸ், திமுக எம்பிக்கள் மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் இருந்தனர். அப்போது அருந்ததியர் சமூகத்தை ஒருவர் கூட மத்திய அமைச்சராகவில்லை. ஆனால் எந்த கட்சியும் செய்ய துணியாத அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த என்னை பாஜக மாநில தலைவராக்கியது. பின்னர் மத்திய அமைச்சராக்கியது.
செருப்பு தைக்கும் குடும்பத்தில் இருந்து வந்த என்னை மத்திய அமைச்சராக்கி பாஜக அழகாக்கியது. ஆனால் இந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இரு அவைகளிலும் என்னை அறிமுகம் செய்து வைக்கடவில்லை. (இந்த வார்த்தைகளை சொல்லும் போது எல். முருகன் கண்களில் கண்ணீர் வர நா தழுதழுக்க உடைந்து போகிறார்)
சாதாரண ஒரு குடும்பத்தில் இருந்து வந்த என்னை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த பாரத பிரதமர் மோடிக்கு நன்றி என்று எல். முருகன் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
மக்களை சந்திப்பது தான் இந்த மக்கள் ஆசீர்வாதம் யாத்திரையின் நோக்கம். கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 நாட்கள் இந்த யாத்திரை நடக்கும். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் யாத்திரை நடத்தப்படும்.
100 நாட்களில் சொன்ன வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. நல்லது செய்தால் திமுகவை ஆதரிப்போம், ஆனால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லிவிட்டு இப்போது நடைமுறை சிக்கல் என்று திமுக கூறி வருகிறது. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதை பொறுத்து தான் கொங்கு நாடு விவகாரம் இருக்கும் என்று கூறினார்.