ஒரு ரூபாய்க்கு 1 கிலோ சர்க்கரை… அப்படியே ஒரு ஓட்டு… திமுக தினுசான பிரச்சாரம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலா சர்க்கரை கொடுத்து ஆதரவு திரட்டினார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னமும் 10 நாட்களே உள்ளன. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக என அனைத்து கட்சிகளும் களத்தில் தீவிரமாக இறங்கி மக்கள் ஆதரவை பெற முயற்சித்து வருகின்றன.
மக்களை சந்திக்கும் போது புதுசு, புதுசாய் யோசித்து வாக்காளர்களுக்கு கட்சியினரும், சுயேட்சைகளும் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றனர். சிலர் பரோட்டா சுடுகின்றனர், டீ போட்டு தருகின்றனர் எனபிரச்சாரம் களை கட்டி வருகிறது.
இந் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு உட்பட்ட பழனி நகராட்சியில் திமுக வேட்பாளர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ சர்க்கரை தந்து வாக்கு சேகரித்து வருகிறார். பழனி நகராட்சியில் 23வது வார்டில் போட்டியிடுகிறார் உமா மகேஸ்வரி. திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார்.
மளிகைக்கடையில் வியாபாரத்தை பார்த்தபடியே வாக்காளர்களிடம் ஆதரவு கேட்டார். ஒரு கிலோ சர்க்கரையை ஒரு ரூபாய்க்கு தந்து திமுகவுக்கு ஓட்டு போடுமாறு அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
இதேபோன்று பழனி நகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி, அங்குள்ள கடை ஒன்றில் சப்பாத்தி சுட்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தார். பிரச்சாரம் இப்படி புதுமையாக ஒரு புறம் இருந்தாலும், கட்சியினரின் இந்த தினுசான பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது என்பது நிஜம்.