Mr. சந்திரமவுலி… சோகத்தில் தமிழ் சினிமா
சென்னை: பழம் பெரும் நடிகரும், இயக்குநருமான ரா. சங்கரன் காலமானார். அவருக்கு வயது 95.
தமிழ் சினிமாவில் அப்பா கேரக்டர்களில் பலர் நடித்திருந்தாலும் சிலர் நடிப்பும், தோற்றமும் எப்போது பார்த்தாலும் பிடிக்கும். அந்த பட்டியலில் உள்ளவர்களில் ஒருவர் தான் நடிகர் ரா.சங்கரன்.
சிவப்பான நிறம், மெலிதான உடல்வாகு. அதிர்ந்து பேசாத அன்பான அப்பா.. கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக அவர் நடித்த மௌன ராகம் படம். மணிரத்னத்தின் படமான இதில் சுட்டி பெண் ரேவதியின் அப்பாவாக சந்திரமவுலி கதாபாத்திரத்தில் நடித்து பார்ப்போரை ஈர்த்தவர்.
அதில் அவர் பேசும் வசனங்கள் அவ்வளவு பிரபலம். கல்யாணம் வேண்டாம் என்று ரேவதி சொன்னதால் நெஞ்சுவலி வந்து படுத்திருக்கும் போது வரும் காட்சி அற்புதம். அங்கே சோகமே உருவாக வந்து நிற்கும் ரேவதியை பார்த்து அன்போடு என்னடா..? என்று கேட்கும் வசனம் டாப் கிளாஸ்.
அதே படத்தில் நடிகர் கார்த்திக் உடன் காபி shopல் ரேவதி உட்கார்ந்திருக்கும் போது வருவார். அதிர்ந்து போன ரேவதி ஒளிந்து கொள்ள, விஷயத்தை கேட்ட கார்த்திக் அவரை மிஸ்டர் சந்திரமவுலி, மிஸ்டர் சந்திரமவுலி என்று அழைப்பார், காபி சாப்பிட அழைப்பார்..
தம்பி நீங்க யாரு? இப்பத்தான் சாப்பிட்டேன்? என்று குழப்பத்துடன், வாஞ்சையுடனும் அவர் சொல்லும் பதில் சூப்பர்.
இப்படி பல படங்களில் அசால்ட்டாக நடித்த அவர் இயக்குநரும் கூட. வேலும் மயிலும், தேன் சிந்துதே வானம் என 8 படங்களையும் டைரக்ட் செய்துள்ளார். வயது மூப்பால் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் அவர் இன்று காலமாகிவிட்டார்.
ரா. சங்கரனின் மறைவு குறித்து அறிந்த திரையுலகத்தினர் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டு உள்ளனர். அவர் மறைந்துவிட்டாலும் அந்த மிஸ்டர் சந்திரமவுலி என்ற காட்சி ரசிகர்கள் மனதில் இருந்து எப்போதும் அகலாது… RIP Mr. Sankaran….!!