உங்களால கொரோனா வந்துச்சு.. ஸ்டாலினிடம் ரூ.1 கோடி கேட்கும் ஆசாமி…!
சென்னை: எனக்கு கொரோனா வந்திருச்சு.. அதனால ஒரு கோடி ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் தரவேண்டும் என்று டுவிட்டரில் ஒருவர் அலப்பறையை கூட்டி இருக்கிறார்.
கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரங்கு வரும் 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் பூட்டப்பட்டு உள்ளன. காய்கறிகள் தள்ளுவண்டிகள் மூலம் வீடுகளுக்கே வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஏழை மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந் நிலையில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டதால் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. எனவே ஒரு கோடி ரூபாய இழப்பீடு தர வேண்டும் என்று ஆசாமி ஒருவர் டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.
ஜானி பாய் என்ற பெயரில் அந்த டுவிட்டர் பதிவு வெளியாகி இருக்கிறது. ஹலோ மிஸ்டர் ஸ்டாலின் அவர்களே என்று ஆங்கிலத்தில் அந்த பதிவு ஆரமபிக்கிறது. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டது. ரேஷன் கடைகளில் நிவாரண நிதி தரப்படும் என்ற உங்கள் முட்டாள்தனமாக முடிவில் எனக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட நீங்கள்(ஸ்டாலின்) தான். எனவே, மறக்காமல் எனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரின் இந்த பதிவு ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் திமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த டுவிட்டர் முகவரி அமெரிக்காவை காட்டுவதால் திமுகவினரோ இது எதிர்க்கட்சிகளின் விளையாட்டு என்று பேச ஆரம்பித்துள்ளனர். மக்களுக்கு ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி அளிக்கப்படுவதை பிடிக்காமல் இப்படி பரப்புகின்றனர் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.