நடிகர் விஜய் யார்...? மதுரையில் ஒட்டப்பட்ட மாஸ் போஸ்டர்கள்..!
மதுரை: இந்த சினிமா ரசிகர்களின் வித்தியாசமான ரசனைக்கு எல்லையே இல்லை. அப்படி ஒரு விருப்பத்தை போஸ்டராக்கி அழகு பார்த்துள்ளனர் மதுரை விஜய் ரசிகர்கள்.
திரையுலக ரசிகர்களின் ஆட்டம், பாட்டம் எப்போதும் வித்தியாசமாக இருப்பது தென் மாவட்டங்களில் தான். அதிலும் குறிப்பாக மதுரை சினிமா ரசிகர்களை பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அப்படி ஒரு குதூகலமான ரசிகர்கள்.
அப்படிப்பட்ட மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள ஒரு போஸ்டர் தமிழகத்தையே பரபரப்புக்கு ஆளாக்கி இருக்கிறது. அதாவது நடிகர் விஜய்யை வாழ்த்தி, வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
நடிகர் விஜய், சங்கீதாவை கரம்பிடித்து 20 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கின்றன. அதனை கொண்டாடும் விதமாக மதுரையில் சுவர்களை வண்ண, வண்ண விஜய் போஸ்டர்கள் அலங்கரித்து வருகின்றன. இருவரும் இணைந்திருக்கும் போட்டோக்கள் போஸ்டரில் பளிச்சிடுகின்றன.
ஆனால்… அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் பின்னி, பெடலெடுக்கும் ரகம். மக்கள் இயக்கத்தின் புரட்சித் தலைவரே, புரட்சித் தலைவியே என்று வாசகங்களை பதிவிட்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். ரசிகர்களின் எண்ணம் இப்படி இருக்க… இந்த போஸ்டர்கள் அதிமுக மத்தியில் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் நிஜம்.