டெல்லியில் ஜெ.க்கு பிறகு ஸ்டாலினை தேடி வந்த சான்ஸ்..!
டெல்லி: டெல்லி வந்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஒரு மாதம் கடந்துவிட்டது. கொரோனா தடுப்பு பணிகளில் அதி தீவிரமாக களம் இறங்கியதால் டெல்லி பயணம் தள்ளி போய் கொண்டே இருந்தது. இப்போது தொற்று ஓரளவு குறைந்துவிட்ட நிலையில் அவர் எப்போது டெல்லி செல்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று டெல்லி சென்றிருக்கிறார். பிரதமர் மோடியை அவர் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்கிறார்.
அதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலி டெல்லி வந்திருக்கிறார். அவரை திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்றனர்.
முதலில் விமான நிலையத்தில் இருந்த நேராக டெல்லியில் கட்டப்பட்டு வரும் திமுக அலுவலகத்தை அவர் பார்வையிட்டார். அதன் பிறகு தமிழ்நாடு இல்லம் சென்றார். அங்கு தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி பட்டாலியன் போலீசாரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அரசு மரியாதையை அளித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் டெல்லி பயணம் பற்றி பல சுவாரசிய தகவல்கள் இருந்தாலும் அவர் தங்கும் தமிழ்நாடு இல்லம் பற்றிய தகவல்கள் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த தமிழ்நாடு இல்லம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்டதாகும். தமிழகத்தில் இருந்து ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் என யார் டெல்லி சென்றாலும் அவர்கள் தங்குவது இங்கு தான்.
காமராஜர் காலத்தில் இந்த தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டாலும், எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் மேம்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஆளுநர், முதல்வர் தங்க வசதியாக இந்த இல்லத்தில் பிரத்யேகமாக சூட் ரூம் என்று ஸ்பெஷல் அறை ஏற்படுத்தப்பட்டது. இந்த ரூமில் சகலவிதமான அனைத்து வசதிகளும் உள்ளது. 2016ம் ஆண்டு ஜூனில் டெல்லி சென்றிருந்த ஜெயலலிதா இந்த ரூமில் தான் தங்கியிருந்தார்.
அவரது மறைவுக்கு பின்னர் முதலமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் டெல்லி வந்தாலும் இந்த சூட் ரூமை பயன்படுத்தியதே இல்லை. 2021ம் ஆண்டு ஜனவரியில் டெல்லிக்கு சென்றிருந்த போது இந்த சூட் ரூமை பார்த்து இனி இங்கு தான் தங்குவேன், வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்றாராம். மக்களின் மனம் வேறாக இருக்க, தேர்தலில் அதிமுக தோற்று ஆட்சியை இழந்து, எடப்பாடியின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.
ஜெயலலிதாவுக்கு பிறகு ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தாலும் அந்த அறையில் தங்கியது இல்லை. இப்போது முதலமைச்சராக டெல்லி சென்றுள்ள ஸ்டாலின் அதே ரூமில் தங்குகிறார். 3 நாட்களும் அவர் இங்குதான் தங்குவார். ஜெயலலிதாவுக்கு பின்னர் இந்த சூட் ரூமில் ஸ்டாலின் முதல்வராக மாறி தங்குகிறார்.