தமிழக காங்கிரசில் 'மாஸ்' மாற்றம்…? 5 பேரில் யாருக்கு சான்ஸ்…?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் விரைவில் மாற்றப்படலாம் என்று டெல்லியில் இருந்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை அரசியல் ஆர்வம்மிக்கவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். ஆனால் இப்போது அக்கட்சியின் நிலைமை அதலபாதாளத்தில் இருக்கிறது என்று சொல்லலாம். கட்சியில் அதிகாரப் பூர்வமாக இன்னமும் தேசிய தலைமைக்கு தலைவர் அறிவிக்கப்படவில்லை.
அடுத்தாண்டு உ.பி உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் வர உள்ளது. அதற்காக வியூகங்களில் பாஜக முன் எடுக்க தொடங்கிவிட்டது. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை நோக்கி பாஜக தயாராகி வருகிறது என்பது அதன் செயல்பாடுகளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.
அதேபோல காங்கிரசும் தயாராகி வரும் நிலையில், முதல்கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் காங்கிரஸ் இறங்கி உள்ளதாக தெரிகிறது. தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தும் பணி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன என்று கூறலாம். அதன் முன்னோட்டமாக கேரளாவில் அண்மையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட்டார். கடந்த வாரம் தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டிக்கும் தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழகத்திலும் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விரைவில் மாற்றப்படலாம் என்று தகவல்கள் கசிந்து இருக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் காங்கிரசுக்கு தற்போது 9 எம்பிக்களும், 18 எம்எல்ஏக்களும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 3 தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு மாற்றப்பட்டு இருக்கின்றனர்.
இப்போது உள்ள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கூடிய விரைவில் மாற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி என்றால் புதிய தலைவர் யாராக இருக்கும் என்று ஒரு பட்டியலும் காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.
குறிப்பாக 5 பெயர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பரிசீலனையில் உள்ளதாம். அதில் முதல் பெயராக இருப்பது முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், எம்பியுமான கார்த்தி சிதம்பரம். தந்தையின் அற்புதமான ஆதரவு இருப்பதால் இவருக்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2வது இடத்தில் கிருஷ்ணகிரி எம்பி டாக்டர் செல்லக்குமாரின் பெயர் அடிபடுகிறதாம். எப்படியாவது காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகும் முயற்சிகளில் அவர் தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்ததாக மிக முக்கியமாக சொந்த கட்சியில் மட்டுமல்ல… மாற்று கட்சியினராலும் பரவலாக அறியப்பட்டவர், சிறந்த பேச்சாளர், விமர்சகர் என்று அறியப்பட்ட பீட்டர் அல்போன்ஸ். இவரது பெயரும் டெல்லி தலைமையின் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
பட்டியலில் 4வது பெயராக விருதுநகர் எம்பி மாணிக் தாக்கூர் பெயர் இடம்பெற்று உள்ளதாக செய்திகள் அடிபடுகின்றன. 5வது பெயராக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டபேரவை முன்னாள் தலைவராக இருந்த கேஆர் ராமசாமியின் பெயரும் இதில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த 5 பெயர்களும் முதல்கட்ட பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தவிர வேறு சிலரின் பெயர்களும் காங்கிரஸ் தலைமை பரிசீலனையில் இருக்கிறதாக தெரிகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் கடந்த 5 ஆண்டுகளில் 3 தலைவர்கள் மாற்றப்பட்டு விட்டனர்.
தற்போது உள்ள தலைவரான கேஎஸ் அழகிரியும் விரைவில் மாற்றப்படலாம் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கும் பரபரப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் கட்சியை எப்படியும் மீட்டெடுக்க வேண்டும் என்பது தலையாய பணி என்பதில், இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், 5 ஆண்டுகளில் திமுகவுடன் இணக்கமாகவே பயணத்தை தொடரும். அதற்கு ஏற்றார் போலும், கட்சியை வழிநடத்தவும் சிறந்த தலைவர் அவசியம் என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் தலைமை அதற்கேற்ப செயல்படும் என்று கூறலாம்...!