கூட்டணி கட்சிகளுக்கு விரைவில் 'ஸ்வீட்' நியூஸ்…! ஸ்டாலினின் சூப்பர் முடிவு..
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக வாரியங்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் கூட்டணி கட்சியினருக்கு அதிக முக்கியத்துவம் தருவதில் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10 ஆண்டுகால காத்திருப்பு முடிந்து… அரியணையில் திமுக வலுவாக அமர்ந்திருக்கிறது. கொரோனா பரவலையும் குறைத்தாயிற்று… இனி ஆட்சியின் அடுத்த கட்டமாக தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நோக்கி தமது பார்வையை படு சீரியசாக முதல்வர் ஸ்டாலின் திருப்பி இருக்கிறது என்றே கூறலாம்.
இப்போது தமது பார்வையை உள்ளாட்சி தேர்தல் களத்தை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் நகர்த்தி உள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். சட்டசபை தேர்தல் போலவே உள்ளாட்சியிலும் மகத்தான வெற்றியை பெற வேண்டும் என்பது ஸ்டாலினின் இலக்கு.
எப்படி சட்டசபை தேர்தலின் போது கூட்டணி கட்சிகளை அனுசரித்து, கச்சிதமாக வெற்றியை அறுவடை செய்தது போன்று இம்முறையும் வெற்றி சதவீதம் உச்சத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாராம். ஆனால் தற்போது ஆட்சி அதிகார பதவிகளில் கிட்டத்தட்ட திமுகவினரே நீக்கமற நிறைந்திருப்பதால் கூட்டணியினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனவாம்.
உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சிகளின் சப்போர்ட் ரொம்ப முக்கியம் என்பதால் சில முக்கிய முடிவுகளை ஸ்டாலின் எடுத்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, கூட்டணி கட்சிகளில் உள்ள முக்கிய நபர்கள், தகுதியானவர்களுக்கு வாரிய பதவிகளை தரலாம் என்று முடிவெடுத்துள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது 25க்கும் மேற்பட்ட வாரியங்களில் உள்ள தலைவர் பதவிகளை கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளின் பிரமுகர்களுக்கு தரலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அதற்கான சாம்பிள் தான் பீட்டர் அல்போன்சுக்கு சிறுபான்மை நல ஆணையர் தலைவர் என்ற பதவி வழங்கியது என்று கோடிட்டு காட்டுகின்றனர். காங்கிரசில் உள்ள கோஷ்டி நிர்வாகிகளுக்கும் பாரபட்சம் இல்லாமல் பதவிகள் உண்டு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
பல ஆண்டுகளாக எந்த கட்டத்திலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாமல் பயணித்து வரும் அமைப்புகள், கட்சிகளுக்கும் நிச்சயம் இந்த முறை வாரிய தலைவர் பதவிகள் உண்டாம். யார் யாருக்கு தரலாம் என்று சம்பந்தப்பட்ட கட்சிகளிடம் திமுக தலைமை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் அதற்கான பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு பதவி விவரங்கள் அறிவிக்கப்படுமாம்… இதன் மூலம் கூட்டணி கட்சிகளின் அதிருப்தியை சமாளித்து, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக் கொடி கட்ட ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.