ஸ்டாலின் முன்னிலை.. உதய சூரியன் சட்டை…! முன்னாள் மநீம துணை தலைவர் ஸ்மார்ட்…
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
மாற்றத்தை ஏற்படுத்தும் மக்கள் நீதி மய்யம் என்ற அடையாளத்துடன் தொடங்கப்பட்ட இந்த கட்சி இப்போது நிலைமை தலைகீழாக இருப்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
சட்டசபை தேர்தல் தோல்வி அக்கட்சியை அதலபாதாளத்துக்கு கொண்டு போய் சேர்த்துவிட்டது எனலாம். கட்சி தலைமை மீது ஜனநாயகம் இல்லை என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, விலகினார் கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன்.
கமல் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்ற மகேந்திரன் பேசியது பெரும் விவாதமானது. கமலும் பதிலுக்கு துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள் என்று காட்டமாக அறிவித்து அதிரடி காட்டினார்.
மகேந்திரனுடன் பொது செயலாளர் குமாரவேல், முன்னாள் ஐஏஎஸ் சந்தோஷ்பாபு, மதுரவாயல் மநீம வேட்பாளர் பத்மபிரியா என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ கமலின் மநீம பணால் ஆனதாக செய்திகள் வெளியாகின.
நிலைமை இப்படி இருக்க மகேந்திரன் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து இருக்கிறார். அவருடன் பத்மபிரியா, அதிமுக முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் உள்ளிட்ட பலரும் அவரவர் ஆதரவாளர்களுடன் திமுகவில் ஜாயின்ட் ஆகினர்.
இதில் ஸ்பெஷலாக அனைவரையும் கவர்ந்தவர் டாக்டர் மகேந்திரன்தான். இணைப்பு நிகழ்ச்சியில் உதய சூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் காட்சி அளித்தார் மகேந்திரன். மநீமவில் இருந்த போது அதன் சின்னமான டார்ச் லைட் சின்னம் சட்டை அணிவது அவர் வழக்கமாக கொண்டு இருந்தார். இப்போது முகாம் மாறியதால் உதய சூரியன் சட்டை என கலக்கலாக வந்து அசத்தி இருக்கிறார்.
மகேந்திரன் இணைப்புக்கு பின்னர் கொங்கு மண்டலத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கை மேலும் வேகம் எடுக்கும் என்றும், மேலும் பலர் திமுகவில் விரைவில் ஐக்கியமாவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.